Wednesday, 4 September 2024

உன்னதமான நிலை

 உன்னதமான நிலை

ஒருவன் பல ஆயிரக்கணக்கான மைல்கள் காரை ஒட்டி இருக்கிறான் என்பதற்காக, அவனுக்கு காரின் இஞ்சின் பற்றி தெரியும் என்று சொல்ல முடியாது.

அதுபோல நமது வாழ்நாள் முழுவதும் காமத்தை அனுபவித்தாலும் நாம் அந்த உன்னதமான நிலைக்கு அருகில் கூட ஒருபோதும் சென்றதில்லை.

அந்த தெய்வீகத் தன்மையின் பக்கத்தில்கூட நாம் செல்ல முடிவதில்லை. இது ஏன்? வயது முதிர்ந்து ஒருவன் கிழவனாக ஆகிறான். அவனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு அவன் வந்துவிடுகிறான். ஆனால் காமத்தின் மீது அவன் கொண்டுள்ள ஆசையிலிருந்து, உடற்புணர்ச்சி செய்ய வேண்டும் என்கிற ஆசையிலிருந்து அவன் ஒருபோதும் விடுதலை அடைந்தது கிடையாது.

இது ஏன்? இது ஏனென்றால் காமக்கலையைப் பற்றி அவனும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அவனுக்குப் புரியும்படியாக சொல்லப்படவுமில்லை. அவன் காம விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தித்தது கிடையாது; மெய்யறிவு பெற்றவர்களிடம் அவன் ஒருபோதும் அது குறித்து கலந்துரையாடியது கிடையாது.

எனவே நான் சில குறிப்புக்களைக் கொடுக்கிறேன். நீங்கள் அவைகளைக் கூர்ந்து கவனித்தால் உங்களது பிரம்மச்சரிய பயணம் சுலபமான தாகிவிடும்.

முதலில் ஒருவரின் சுவாசம் வேகமாகச் சென்றால் உடற்புணர்ச்சியின் நேரம் குறைவாக இருக்கும். ஒருவரின் சுவாசம் அமைதியாகவும், மெதுவாகவும் செல்லுமெனில் உடற்புணர்ச்சியானது அதிக நேரம் நீடிக்க முடியும்.

மேலும் எந்த அளவுக்கு உடற்புணர்ச்சியானது அதிக நேரம் நீடிக்கிறதோ அந்த அளவுக்கு காமத்தை சமாதி நிலைக்கான ஒரு வாசலாக ஆக்க முடியும்.

அப்போது காமத்தை மிகவுயர்ந்த பேரின்பநிலைக்கு வாய்க்காலாக ஆக்க முடியும்.

நான் முன்பு கூறிய ஆணவமற்ற நிலையும், காலமில்லாத நிலையும் அந்த உடலுறவு எந்த அளவுக்கு அதிகநேரம் நீடிக்கிறதோ அவ்வளவுக்கு அதிமெய்யுணர்வின் அம்சங்களின் அனுபவம் அதிகமாகும்.

மூச்சு விடுதல் மெதுவாக இருக்க வேண்டும். சுவாசத்தை மெதுவாக மெதுவாக விட விட அது காமத்தில் ஆழ்ந்த அறிவை மேன்மேலும் கொடுக்கும்.

அடுத்து உடற்புணர்ச்சியின்போது நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவெனில் உங்களது இரண்டு கண்களுக்குமிடையில், ஆக்ஞை சக்கரம் என்னுமிடத்தில் உங்களது உணர்வு முழுவதும் செலுத்தப்பட வேண்டும்.

அப்படி நமது கவனம் அந்த இடத்தில் குவிக்கப்படுமானால் நாம் உடற்புணர்ச்சியின்போது பெறுகின்ற உச்சக்கட்ட இன்பமும் மூன்று மணி நேரம்கூட நீடிக்க முடியும்.

மேலும் இதுபோன்ற தொரு உடற்புணர்ச்சி அனுபவம் மட்டும்தான் ஒரு மனிதனை பிரம்மச்சரியம் என்ற மண்ணில் வேரூன்ற வைக்கும். இந்த வாழ்க்கையில் மட்டுமல்ல. அவனது அடுத்த பிறவியிலும் கூட அந்த அனுபவம் நிலைக்கும்.

செக்ஸைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், அதில் ஆழ்ந்து சென்றவர்கள். வாழ்க்கையின் பலதரப்பட்ட அனுபவங்களைக் குறித்து தியானம் செய்தவர்கள் கண்டு பிடித்துள்ள உண்மை என்னவெனில் ஒரு மனிதனின் உடற்புணர்ச்சியானது ஒரு நிமிஷ நேரம்தான் இருக்குமானால் அந்த மனிதன் மீண்டும் அடுத்த நாளே உடற்புணர்ச்சிக்கொள்ள ஆசைப்படுவான்.

ஆனால் அதே உடற்புணர்ச்சியானது மூன்று நிமிட நேரம் நீடிக்குமானால் அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் செக்ஸைப் பற்றி நினைக்க மாட்டான் என்பதுதான்.

அதோடல்லாமல் உடற்புணர்ச்சியானது ஏழு நிமிட நேரம் நீடிக்கப் படுமானால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவனுக்குள் காம எண்ணங்கள் எழுவதில்லை. அவன் காமத்திலிருந்து கொஞ்சம் விடுதலை பெற்று விடுவான்.

அதேபோன்று உடற்புணர்ச்சியின் நேரம் மூன்று மணி நேரமாக நீடிக்குமானால் ஒரு மனிதன் காமத்திலிருந்து என்றென்றைக்கும் விடுதலைப் பெற்று விடுவான். அவனுக்கு அதன் மீது மீண்டும் ஆசை எழாது!

ஆனால், சாதாரணமாக மனிதனின் உடற்புணர்ச்சி அனுபவம் ஒரு க்ஷண நேரம் தான் நீடிக்கிறது. அப்படியிருக்கும் போது மூன்று மணி நேரம் என்பதை கற்பனைகூட பண்ணிப் பார்க்கமுடியாது.

எது எப்படியிருந்தாலும் ஒருவனால் உடற்புணர்ச்சி நிலையில், அந்த சமாதி நிலையில் மூன்று மணி நேரம் மூழ்கியிருக்க முடியுமெனில் அவன் தனது வாழ்வில் ஒருமுறை உடற்புணச்சி செய்தாலே போதும்.

அந்த அனுபவம் அவனது வாழ்வின் மீதிகாலம் முழுதும் அவனை செக்ஸில் இருந்து விடுவித்துவிடும்.

அப்படிப்பட்டதொரு அனுபவமும். பேரானந்தமும், அதாவது அவனது வாழ்நாள் முழுவதும்நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு அந்த அனுபவம் ஆகிவிடும்.

பூரணமான உடற்புணர்ச்சிக்குப் பின்னர் உண்மையான பிரம்மச்சரியத்தை அடைவதற்கு எந்தத் தடையும் இருக்காது.

உண்மையான பிரம்மச்சரியம் என்பது முழுவதுமாக காமத்தை அனுபவித்து கடந்து செல்வதுதான்.

யாரால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உடற்புணர்ச்சியில் நிலைத்திருக்க முடிகிறதோ அவன் காமத்தின் மூலம் சமாதி நிலையை தொட்டு விட்டான் என்று அர்த்தம். 

யாராக இருந்தாலும் சரி செக்ஸை உண்மையிலேயே அனுபவிக்காமல் பிரம்மச்சரியத்தின் அந்த சிறந்த நிலையை உணர முடியாது என்று கூற விரும்புகிறேன்.

மேலும் அந்த அனுபவம் இந்தப் பிறவியில் இருக்கலாம் அல்லது இதற்கு முந்தையப் பிறவியில் ஏற்பட்டிருக்கலாம் என்பதையும்  கூறவிரும்புகிறேன்.

ஒருவன் இந்தப் பிறவியில் உடற்புணர்ச்சி இன்றி  பிரம்மச்சரியத்தை அடைந்தால் அது அவன் முந்தையப் பிறவியில் செய்த ஆழ்ந்த உடற்புணர்ச்சியின் பலன்தானே தவிர வேறொன்றுமில்லை.

இதுதான் அதற்கான விளக்கம். ஒரு மனிதன் தனது முற்பிறவியில் செக்ஸைப்பற்றி ஆழ்ந்த அனுபவ மிருந்தால் அவன் இந்தப் பிறவியில் செக்ஸின் மீது நாட்டமில்லாமல் இருப்பான்.

காமம் அவனைத் தொந்தரவு செய்யாது. அவனது கற்பனையில்கூட காமம் இருக்காது. மாறாக மற்றவர்கள் எல்லோரும் செக்ஸின் மீது ஏன் இப்படி ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எண்ணி அவன் ஆச்சரியப்படுவான்.

மக்கள் ஏன் இப்படி செக்ஸ் பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்று அவன் அதிர்ச்சியடைவான்.

இப்படிப்பட்ட மனிதன் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பதற்குக் கூட அதிகப் பிரயத்தனம் எடுக்க வேண்டியதிருக்கும்.

ஒரு மனிதன் தான் எந்தவிதமான ஆழ்ந்த செக்ஸ் அனுபவமும் இல்லாமலே, பிறக்கும் போதே பிரம்மசாரியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தால் அது தவறு.

அவன் எளிதில் பயித்தியமாகிவிடுவானே தவிர பிரம்மச்சாரி ஆக மாட்டான்.

பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்க அதிக முயற்சி செய்பவர்களும் பயித்தியமாகிவிடுவார்கள். பிரம்மச்சரியம் என்பது வெளியில் இருந்து திணிக்க முடியாதது.

தனது செக்ஸ் அனுபவத்தின் சாராம்சமாக பிரம்மச்சரியம் எழவேண்டும். ஆழ்ந்த அந்த ஓர் அனுபவத்தின் விளைவுதான் பிரம்மச்சரியமாக இருக்கும். செக்ஸ்தான் அந்த அனுபவம்.

செக்ஸ் அனுபவத்தின்போது ஒருவன் அந்த முழுமையான உணர்வைப் பெற முடியுமெனில், ஒரே ஒருமுறை மட்டும் பெற்றால் போதும் அவன் இனிவரும் முடிவில்லா பிறவிகளிலும் கூட செக்ஸிலிருந்து விடுதலைப் பெற்றுவிடுவான்


.

No comments:

Post a Comment