மூன்றாவது விழி
மூன்றாவது விழி இருக்குமிடத்தில்
மூன்றாவது விழியின் அளவுக்கே திலகம் இடப்பட்ட பிறகு,
அந்த இடம் மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும்
அப்புறம் ஒரு நேரம் வரும்.
அது முதல், எல்லாம் மறந்துபோய் நெற்றித் திலகம் மட்டுமே நினைவில் நிற்கும்.
அந்த நிலைவந்தபிறகு, உங்களால் மூன்றாம் விழியைத் திறக்க முடியும்.
இந்தப் பயிற்சி ஏற்பட்ட பிறகு உங்கள் முழுப் பிரக்ஞையும் படிக நிலை அடைந்து மூன்றாம் விழி நோக்கியே இருக்கும்.
ஒருமுகப்பட்ட பிரக்ஞையின் குவிமையமே மூன்றாம் விழியின் திறவுகோல்.
கதிரொளியை ஒரு குவி ஆடியின் மூலமாக ஒரு காகிதத்தின் மேல் விழச் செய்தால், ஒளி,புள்ளியாகக் குவியும்போது அந்த மையப் புள்ளியில் தீப்பிடிக்கும்.
சூரியக் கதிர்கள் ஒன்றுபட்டுச் செறியும்போது, நெருப்புப் பற்றிக்கொள்கிறது.
பிரக்ஞை, உடல் முழுவதுமாகப் பரவியிருக்கும்போது, அது உங்கள் வாழ்வைச் சுமக்கிற வேலையைச் செய்கிறது.
அது ஒட்டு மொத்தமாய்மூன்றாம் விழியில் குவியும்போது நெற்றிக் கண்ணில் தீப்பொறி பறக்கிறது!
மூன்றாம் விழியே அதில் பற்றி எரிகிறது!
அப்போதுதான் உன் உலகப் பிரபஞ்சத்தை அடைத்திருந்த கதவு திறந்து கொள்கிறது.
அதனால், திலகம் சரியான இடத்தில் வைப்பது முக்கியம்.
உங்கள் குரு. உங்கள்மூன்றாம் விழியின் இடத்தைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்துகொள்ளாமலேயே, உங்கள் திலகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்.
உங்கள் முன்னேற்றத்தை அறிந்து கொள்வார்.
மூன்றாம் விழியின் இடம் கீழே நகர நகர, நீங்களும் திலகத்தைக் கீழே நகர்த்தி வைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
ஒவ்வொரு நாளும் அது நகர்வதை உணர்வீர்கள்.
அந்த மாற்றமே குருவுக்கு உங்கள் முன்னேற்றத்தை உணர்த்திவிடும்.
ஒரு குருவுக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்கலாம்.
சீடன் குருவின் முன் தலை பணிந்து வணங்கும்போது, திலகத்தின் நிலை கண்டு, அவனது முன்னேற்றத்தை அவர் உணர்ந்துகொள்வார்.
சீடனின் திலகமே அவனது முன்னேற்ற அறிகுறி.
சீடனுக்குத் தடையேற்படலாம்.
அவனுடைய பிரக்ஞை ஒன்று குவியாமல் போகலாம்.
திலகத்தைத்தவறான இடத்தில் வைக்கலாம்.
அதையெல்லாம் குரு கண்டுகொள்வார்.
மையம் கீழே இறங்கும்போது, தியானமுறை மாற வேண்டும்.
மருத்துவமனையில், நோயாளியின் நோய்க் குறிப்பு அட்டை போலத்தான் சீடனின் திலகம், குருவுக்கு.
செவிலி, நோயாளியின் உடல் வெப்பம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு போன்றவற்றை அதில் அவ்வப்போது குறித்து வைக்கிறாள்.
மருத்துவர் வந்து பார்த்து, நோயாளியின் நிலையறிகிறார்.
அப்படித்தான் நெற்றித் திலக நிலை கண்டு, குரு, சீடனின்பக்குவ நிலையை அறிகிறார்.
எப்படி இருக்கிறாய் என்று சீடனை அவர் கேட்க வேண்டியதே இல்லை.
சீடனுக்கு எந்தவகை உதவி தேவை. சீடன் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குருவுக்குத் தெரிந்துவிடும்.
திலகத்தின் மதிப்பு இதுதான்.
தியான மாற்றத்தைத் தெரிவிக்கும் அறிகுறி அது.
No comments:
Post a Comment