Wednesday, 4 September 2024

சரக்கலை

 சரக்கலை

பாகம். 5

" நஃப்ஸு லவ்வாமா " 

(சுவாதிஷ்டானம்) 

ஆன்மீகப் படிநிலையில் சிறப்பு அந்தஸ்து பெற்ற இரண்டாம் மனம் நஃப்ஸு லவ்வாமா ஆகும்.

நஃப்ஸு அம்மாரா எனும் முதல் மனமானது ஏழு சக்கரங்களில் முதல் சக்கரமான மூலாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. 

இதன் பொதுவான குணம் உண்ணுதல், குடித்தல், உறங்குதல், உடல் சுகம் அனுபவித்தல். 

சுருக்கமாக சொல்வதென்றால் இறை நினைவை விட்டும் பொடுபோக்காக இருப்பது. 

துன்யாவுடன் மிக நெருக்கமானது, 

மறுமைக்கும், திக்ருக்கும் எதிரானது,

இது தட்டி எழுப்பப்பட்டு முஜாஹதா எனும் உளப் போராட்டத்துடன் மேன்மை அடைந்து மற்றொரு பரிமாணத்திற்கு மாறுகிறது. 

அதற்கு " நஃப்ஸு லவ்வாமா " என்று சொல்லப்படும்.

இந்த நஃப்ஸின் மீது அல்லாஹ் சத்தியமிட்டு கூறும் அளவிற்கு இது சிறப்பு வாய்ந்தது.

وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ 

" தவறு செய்தால் தன்னைத்தானே பழிக்க கூடிய " நஃப்ஸு லவ்வாமா " எனும் ஆத்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன். "

நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் கலந்த கலவையாக இந்த மனம் இருக்கிறது. 

ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பொருத்தவரை:

المذمومة

இந்த மனம் இகழத்தக்க மனம் தான் !

அதாவது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்து ;

பாராட்டத்தக்க பல நற் குணங்கள் இதில் இருக்காது என்பதே,

ஆனால் தான் திருந்தி விட வேண்டும் என்ற குற்ற உணர்வுடன் ஆன்மத் துடிப்பில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனம் தான் இந்த நஃப்ஸு லவ்வாமா.

அதன் கவலைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்றால் !

تلوم على الخير والشرّ.

நன்மை மற்றும் தீமை இரண்டிற்குமே பழிக்க கூடியதாக இருக்கும் !

தீமை செய்தால் தன்னைத்தானே நொந்து கொள்வது வரவேற்க தகுந்தது, 

நன்மை செய்தால் ஏன் தன்னைத் தானே பழித்துக் கொள்ள வேண்டும் ?

சூபியாக்கள் இதற்கு இரண்டு விளக்கங்கள் கூறுகின்றனர் ;

1. பிறரிடம் நன்மை ஏற்படும் பொழுது இந்த ' மகாமில் ' தரிபட்டவர் கடுமையான பொறாமையால் பாதிக்கப்படுவார் !

எனவே முஜாஹதா, ரியாழா எனும் உளப் போராட்டம்செய்து தன் உள்ளத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பார்.

2. தான் செய்யும் நன்மைகளை அற்பமாக கருதி தன்னிறைவு கொள்ளாமல் இருப்பார்! 

தான் ஒரு நற்கிரியைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று தன்னைத் தானே நொந்து கொள்வார் .

இதனால் நன்மையின் பக்கம் மிக வீரியமாக செயல்படும் ஆன்மீக பலம் பெறப்படுவார் !

* ஏழு சக்கரங்களில் இரண்டாம் சக்கரமான சுவாதிஷ்டானம் இதோடு சம்பந்தப்பட்டது. 

இந்த ' மகாம் ' ஏற்படும்போது கடுமையான பாலியல் உணர்வுகள் கொந்தளிக்கும். 

சீடர் சில நேரங்களில் தன் கற்பை வைத்து சோதிக்கப்படுவார் !

அதில் வென்றவர் அடுத்த கட்ட ஆன்மீகப் பயணத்திற்கு தகுதி உள்ளவர். 

பாலியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்களுக்கு,

  காரியங்களின் உட்கருத்தை விளங்கும் விசேஷ ஞானம் வழங்கப்படுவதாக மகான்மார்கள் கூறுகிறார்கள் !

பாவமான காரியத்திற்கு பலவந்த படுத்தப்பட்ட ஹஜரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் கற்பை பேணிப் பாதுகாத்ததால், சிறையில் வைத்து கனவுக்கு விளக்கம் சொல்லும் ஞானம் வழங்கப்பட்டார்கள் !

ஹஜரத் இப்னு சீரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு விதவைப் பெண்ணால் தனிமையில் பலவந்தப்படுத்தப்பட்ட பொழுது அசுத்தத்தை தன் உடலில் தடவி அந்த பெண்ணுக்கு வெறுப்பை ஏற்படுத்தினார்கள்,

கனவில் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டார்கள் ;

நபியவர்கள் தன் மேலிருந்த ஆடையை எடுத்து அவர்களுக்கு போர்த்தினார்கள்,

அவ்வளவுதான் !

இன்று வரை கனவுலகுக்கு விளக்கம் சொல்லும் மாமேதையாக ஹஜரத் இப்னு சீரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மாறிவிட்டார்கள்,

 அவர்களின் تعطير الانام في تعبير المنام எனும் நூல் தான் உலகளாவிய கனவுக்கு விளக்கம் சொல்லும் நூல்களின் அடிப்படையாக இருக்கிறது.

 நஃப்ஸு லவ்வாமாவில் ஏற்பட்ட சோதனைகளின் காரணமாக மூன்றாம் கட்ட மனம் பெறப்படும்,

 அது தான் ஞானங்கள் உதயமாகும் மனமான 

" நஃப்ஸு முல்ஹிமா " 

இல்ஹாம் எனும் தெய்வ உதிப்புகள் வெளியாகும் மனம்.

அதற்கு முன் நஃப்ஸு லவ்வாமாவை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

பெருமை, பொறாமை, காமம் ‌ போன்ற துற் குணங்கள் கட்டுக்கடங்காமல் உள்ளத்தில் கரைபுரண்டு ஓடும் பொழுது முரீதானவர் மிக வேதனைக்கு உள்ளாகுவார்,

இறைவன் புறத்து ஜதுப் இன்ப நிலைகள் அவ்வப்போது அவரின் காயங்களுக்கு மருந்து இடும்.

இதற்கு குருவின் ஞான வெளிச்சம் இன்றியமையாதது.

இருட்டில் வேதத்தை ஓதுவதற்கு விளக்கின் ஒளி போன்றவர் ஞானகுரு,

இரண்டாம் கட்ட இந்த மனதோடு சம்பந்தப்பட்ட வேறு தீய குணங்கள் ;

சோம்பல், பயம், சந்தேகம், பழிவாங்குதல் மற்றும் பேராசை.

இந்த தீய குணங்களை உள்ளத்தில் இருந்து கழட்டுவதற்கு கடுமையான முயற்சி தேவை.

மனதின் இயற்கை தன்மையே மிக வேகமாக சுழல்வது தான் .

ஒவ்வொரு மனங்களும் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழலும் பொழுது சாட்சித் தன்மையுடன் அதை கவனித்து,

 பயிற்சி செய்து, அதை அடக்கி, இறை நாமம் உச்சரித்து அதன் சுழல் வேகத்தை ஒடுக்கும் பொழுது அந்த சக்கரம் நேர்படுத்தப்படும். 

தொப்புளுக்கு சற்று கீழ் பகுதியில் இந்த மனதின் சுழற்சி  இருக்கும்.

இந்த மனதில் நற்குணங்களை விதைப்பது எளிதல்ல !

சூபியாக்கள் கூறுகிறார்கள் ;

ذلك أنه لا يمكن أن تبنى الأخلاق الطيبة إلا بعد اجتثاث ما يخالفها من الأخلاق الخبيثة.

அவற்றின் முரணான கெட்ட குணங்களை ஒழித்தால் ஒழிய நல்ல ஒழுக்கங்களைக் கட்டியெழுப்பவே முடியாது.

தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடி, பணிவை மேற்கொண்டு, தியானம் மேற்கொண்டு, மனம் விரும்பாம நிலையில் பல நற்காரியங்களை மேற்கொண்டு, எதிர்த்து போராடுவதன் மூலம் இந்த மனதை அடக்க முடியும். 

அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே மிக அறிந்தவர்கள்.

~ பீர் முகம்மது சதகீ.

No comments:

Post a Comment