இறப்பு
ஒருத்தர் தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவரைப் பற்றி என்ன நினைப்போம்?
நேற்று வரைக்கும் நன்றாகத்தானே இருந்தார். இன்றைக்கு ஏதோ நடந்துவிட்டது. அதுதான் அப்படி
தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைப்போம்.
ஆனால் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வருவது தப்பு. ஏனென்றால் சில ஞானிகளும் அப்படி சிரிப்பது உண்டு.
ஜப்பானில் ஹோட்டே என்ற
ஒரு ஞானி இருந்தார்.
எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்.
அவர் எதுவும் பேச மாட்டார். அவருக்கு சிரிக்கும் புத்தர் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.
சீனாவில் மூன்று ஞானிகள் இருந்தார்கள்.
மூன்று சிரிக்கும் சன்யாசிகள் என்று பெயர் அவர்களுக்கு.
ஏனென்றால் அவர்களின் உண்மையான பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது.
அந்த மூன்று பேரும் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஊர் ஊராக போவார்கள்.
சிரிப்பார்கள்.
இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?
எதற்கு சிரிக்கிறார்கள்? என்று புரியாமலே அவர்களை சுற்றி நின்று எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்.
கொஞ்ச நேரத்தில் அவர்களும் மெதுவாக சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதன் பிறகு அந்த இடம் ஒரே சிரிப்பு மயமாக ஆகிவிடும்.
யாராவது அவர்களிடம் போய் எங்களுக்கு ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டால் நாங்கள் உங்களுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் வெறுமனே சிரிக்கிறோம். இப்போது இந்த சூழ்நிலையை சிரிப்பாக மகிழ்ச்சியாக மாற்றுகிறோம். அவ்வளவுதான் என்பார்கள்.
ஒரு தடவை ஒரு கடைத் தெருவில் வந்து நின்று அந்த மூன்று பேரும் சிரித்து இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்களைப் பார்த்ததும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு முன்னால் அந்த இடத்திலே நிறைந்து இருந்த மன இறுக்கம், பணம் , பேராசை, ஏமாற்று வேலை எதுவும் இல்லை. இப்போது அந்த இடம் பூராவும் சிரிப்பு.மகிழ்ச்சி.
படிக்காத அந்த மூன்றுமே சந்நியாசிகளும் சீனா முழுதும் போய் மக்களை மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்தார்களாம்.
ஒரு கிராமத்தில் அவர்கள் இருக்கும்
போது அந்த மூன்று பேரில் ஒருவர் இறந்துவிட்டார்.
இப்போது எப்படி அவர்கள் சிரிக்கப் போகிறார்கள்? பார்க்கலாம் என்று மக்கள் ஆவலாகப் போய் பார்த்தால் இறந்து கிடந்த சன்யாசி உடலைச் சுற்றி மற்ற
2 பேரும் ஆனந்தமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.
இது என்ன பைத்தியக்காரத்தனம் இவர் இறந்து கிடக்கிறார். நீங்கள் ஆடிக் கொண்டிருக்கிறீர்களே? என்று மக்கள் கேட்டிருக்கிறார்கள்.
அப்படி இல்லை நாங்கள் மூன்று பேரும் உயிரோடு இருக்கும்போது யார் முதலில் இறக்கப் போவது? என்று பேசிக் கொள்வோம். இப்போது அவர்
இதில் ஜெயித்துவிட்டார்.
நாங்கள் எப்போதும் சிரித்தே வாழ்ந்தோம்.
இப்போது எங்கள் நண்பரை சிரித்தபடியே வழி அனுப்புகிறோம். நாங்கள் அவர் இறந்ததாக நினைக்கவில்லை.
வாழ்வுக்கு ஏது சாவு என்றார்கள்.
அதன் பிறகு அவரை சுடுகாட்டுக்கு கொண்டு போவதற்கு முதல் குளிப்பாட்டுவதற்கு மக்கள்
முடிவெடுத்து இருக்கிறார்கள்.
அது முடியாது ஏனென்றால் எங்கள் நண்பர் தான் இறந்தால் குளிப்பாட்டாமல் அப்படியே இருக்கும் ஆடையோடு சிதையில் வைத்து கொளுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்றார்கள்.
அப்படியே கொண்டுபோய்
கொளுத்தி இருக்கிறார்கள்.
நெருப்பை வைத்ததும் ஒரு பெரிய ஆச்சரியம். அந்த சிதையில் இருந்து நிறைய வெடிச்சத்தங்கள், வாணவேடிக்கைகள்.
அந்த சன்யாசி தான் இறப்பதற்கு முன் தன்னுடைய உடையில் யாருக்கும் தெரியாமல் பட்டாசுகளையும் மறைத்து வைத்திருந்தார்.
அப்போது மக்கள் அந்த வேடிக்கையைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
இந்த இரண்டு சன்யாசிகளுடன் சேர்ந்து அவர்களும் ஆட ஆரம்பித்து விட்டார்களாம்.
இறப்பு என்பது உண்மையில் இறப்பு அல்ல.
புதிய வாழ்வின் ஆரம்பம்.
அதைக் கொண்டாடி மகிழ வேண்டும்.
இறப்பு வரும் போது அதை மகிழ்ச்சியாக வரவேற்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால் இறப்பு கூட தன் கொல்லும் சக்தியை இழந்துவிடும். அதற்குப் பதிலாக நீங்கள் அதைக் கொன்று விடுகிறீர்கள்.
ஓசோ.
No comments:
Post a Comment