Monday, 2 September 2024

ஆசை என்னும் கோடு!

ஆசை என்னும் கோடு!

சில நாட்களுக்கு முன் நான் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர் மிகவும் கவலையாக, இரவு முழுவதும் உறங்காமல் திண்டாடினார். அவரிடம் நான், என்ன விஷயம் என்று கேட்டேன். அவர், "என்ன சொல்வேன்! பெரிய இடி தலையில் விழுந்து விட்டது. ஐந்து லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது!” என்றார்.

ஐந்து லட்சம் நஷ்டம் என்றால் கவலைப் படுவது இயற்கைதானே! நான் அவர் மனைவியிடம், “என்ன ஆயிற்று?

எப்படி ஐந்து லட்சம் நஷ்டம் ஏற்பட்டது?” என்று கேட்டேன். அவர் மனைவி கூறினாள்: "நீங்கள் அவர் பேச்சைக் கேட்டு நம்பாதீர்கள். ஐந்து லட்சம் நஷ்டம் ஏற்படவில்லை. ஐந்து லட்சம் லாபமே கிடைத்துள்ளது!'' என்றாள்.

எனக்கு ஒரே திகைப்பாகி விட்டது. நீங்கள் சொல்வது உண்மையா?” என்று வியப்புடன் நான் கேட்ட போது, அவள், உண்மையாகத்தான் சொல்கிறேன். அவருக்குப் பத்து லட்சம் லாபம் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ஐந்து லட்சம் லாபம் கிடைத்தது. அதனால் அவருக்கு ஐந்து லட்சம் நஷ்டமானதாகத் தோன்றுகிறது.

தூக்கம், ஓய்வு இல்லாமல் திண் டாடுகிறார். இரத்தக் கொதிப்பு அதிகமாகிவிட்டது. ஐந்து லட்சம் லாபம் கிடைத்துள்ளது என்று அவருக்குப் புரிய வைக்க ஒரு உபாயமும் தெரியவில்லை," என்றாள்.

நான் அவரிடம் சென்று விசாரித்தேன். அவர் உடனே, 'ஐந்து என்ன பெரிது! பத்து லட்சம் கிடைத்திருக்க வேண்டும். பதினைந்துகூடக் கிடைத்திருக்கலாம். ஐந்து லட்சம் கிடைத்தது என்ன பிரமாதம்! குறைந்தது ஐந்து லட்சம் நிச்சயம் நஷ்டமாகிவிட்டது!" என்றார்.

இது காமத்துடன் கூடிய புத்தி. இது எப்போதும் தோல்வியே அடைகிறது. லாபம் கிடைத்தும் கூட நஷ்டமே உணர்கிறது, இந்தப் புத்தி! ஏனெனில் ஆசைக்கு ஓர் அளவில்லை. முடிவில்லை. கிடைப்பதெல்லாம் சொற்பமாகவே தெரிகிறது.

கிடைக்கும் வெற்றி அனைத்தும், ஆசை உணர்வின் முன், மதிப்பின்றி ஆகி விடுகிறது.

என்ன கிடைத்தாலும் திருப்தி கிடைப்பதில்லை. எது கிடைத்தாலும் சந்தோஷம் கிட்டுவதில்லை.

காமத்தோடு கூடிய, ஆசையோடு கூடிய கர்மம் நஷ்டமடைவது தவிர்க்க முடியாதது.

அது செயலின் குறையல்ல. அதன் ரகசியம், காமத்துடன் கூடியதாக இருப்பதில்தான்.

ஆசை, எதிர்பார்பற்ற சின்னஞ்சிறு செயல் கூட வெற்றியே அடைகிறது."

நிச்சயமாக வெற்றியே! ஏனெனில் எந்தவிதச் சாத்தியமும் இல்லை. அந்த நிலையில் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை.

அதனால் எது கிடைக்கிறதோ அதுவே ஏராளம். ஏதாவது எதிர்பார்த்து இருந்தாலல்லவா, அதைவிடக் கிடைத்தது குறைவு என்று கூற?

ஒருகதை நீங்கள் கேட்டிருக்கலாம். அக்பர் தனது தர்பாரின் போது, தரையில் ஒரு கோட்டைக் கிழித்து, 'இதைத் தொடாமல், அழிக்காமல் சிறியதாக்க முடியுமா?” என்று கேட்டார். தர்பாரில் கூடியிருந்த ஒருவருக்கும் வழி தெரியவில்லை. பிறகு பீர்பால், அந்தக் கோட்டிற்கு அருகில் மற்றொரு கோடு, அதைவிட நீளமாக வரைந்தார். அக்பர் வரைந்த கோட்டைத் தொடவில்லை, அழிக்கவில்லை! அதைவிடப் பெரியதாக வரைந்தார். அவ்வளவுதான்! பழைய கோடு சிறியதாகிவிட்டது!

எதிர்பார்ப்பின் பெரிய கோடு, யாருடைய மனதில் வரையப்பட்டிருக்கிறதோ, அவருக்கு வெற்றியின் எல்லாக் கோடுகளும் சிறியதாகவே தெரியும். விருப்பம் எல்லையற்றது.

பீர்பால் வரைந்தது பெரிதல்ல. அதைவிட ஆசையின் கோடு முடிவற்றது, இரு முனைகளிலும்!

பிரம்மத்தை அறிந்தவர்கள், பிரம்மம் எல்லையற்றது, முடிவற்றது என்கின்றனர்.

ஆனால் பிரம்மத்தை அறியாதவர்களும் ஒரு எல்லையற்ற, முடிவற்ற விஷயத்தை அறிவார்கள். அதுதான் ஆசை!

எந்த எல்லையற்ற எதிர்பார்ப்பின் எதிரில் அடையப்பட்ட எந்த வெற்றியும் எப்போதும் சிறியதாகவே ஆகி விடும்.

விருப்பமற்று, பலன் எதிர்பார்க்காமல், ஆசையற்றுச் செயல் புரிவது என்பதே திருப்தியான நிலை .

எதிர்பார்ப்பின் கோட்டை அழித்து விட்டால், சிறிய செயல்கூடத் திருப்தியளிக்க முடியும். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி.

ஏனெனில் எடை பார்ப்பதற்கு, ஒப்பிடுவதற்குவேறு எந்தக் கோடும் இருப்பதில்லை.

எதிர்பார்ப்பற்ற நிலை ஒரு போதும் துக்கத்தை அளிக்காது. லாபத்தை எதிர்பார்த்துச் செய்யும் செயலே துக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் ஏழை மக்கள் அதிக ஏமாற் றமோ, துக்கமோ அடைவதில்லை என்பது வேடிக்கையான உண்மை.

அவர்களே அதிகமாக ஏமாற்றமடைய வேண்டும். ஆனால் அந்த நியதிக்குப் புறம்பாகவே உண்மை இருக்கிறது. ஏழை மக்கள் அதிகத் துக்கமோ, ஏமாற்றமோ அடைவதில்லை.

பணக்கார வர்க்கமே அதிக வேதனையும் துக்கமும் அடைகிறார்கள். என்ன காரணம்?

உண்மையில் ஏழை மக்கள் எல்லையற்ற ஆசை வைக்கும் தைரியம் அடைவதில்லை. அவர்களுக்குத் தங்கள் எல்லை தெரியும். எது கிடைக்க முடியும், எது சாத்தியமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். நமது சக்திக்கு வெகு தொலைவில் இருக்கும் விஷயங்கள் எல்லையற்ற ஆசையின் கோடுகளாவதில்லை. அதனால் ஏமாற்றம் அடைவதில்லை.

வசதியுள்ள பணக்காரன், நிறைந்த சௌகரியங்கள் உள்ளவன் ஆசையின் கோடுகளைக் கணக்கற்ற அடுக்குகளில் பெருக்கிக் கொண்டே போகும் தைரியம் உள்ளவனாகிறான்.அவ்வளவுதான்! அத்துடன் கூடவே ஏமாற்றமும் உதயமாகி வளர்கிறது..

எதிர்பார்ப்பு, ஆசை என்ற எல்லா பெரிய கோட்டையும் அழித்து விடுங்கள்.

பிறகு துக்கம், துயரம், தோல்வி என்பதே இல்லை. 

No comments:

Post a Comment