Sunday, 6 October 2024

பிரபஞ்சநீதி

 பிரபஞ்சநீதி 

 பிரபஞ்சத்தில் ஒருபோதும் அநீதி நடப்பதில்லை. நடக்கும் காரியங்கள் 

எல்லாம் நியாயமானவைகளாகவே உள்ளன.

தொலைவில் யாரோ உட்கார்ந்து கொண்டு நீதியுடனும், அநீதியாகவும் காரியங்கள் நடத்திக் கொண்டிருக்கவில்லை. 

பிரபஞ்ச அமைப்பு சில ஆதார விதிமுறைகளைத் தன்னுள் வைத்து கொண்டிருக்கிறது. 

அவற்றிற்கு தர்மங்கள் என்று பெயர். 

நீங்கள் தள்ளாட்டத்துடன் நடந்து சென்றால் கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வீர்கள். அதற்காக நீங்கள் நீதிமன்றம் சென்று புவியீர்ப்பு விசையிடம் நஷ்டஈடு கோர முடியாது. 

நீங்கள் கீழே விழுவது, விழாமல் நன்றாக நடப்பது பற்றியெல்லாம் எந்தவித அக்கறையும் புவியீர்ப்புக்குக் கிடையாது. நீங்கள் தடுமாறாமல் நேராக நடந்தால் கீழே விழாமல் தப்பித்துக் கொள்ளலாம். தள்ளாடினால் தடுக்கி விழுவீர்கள். 

நீங்கள் கீழே விழுவதைப் பார்த்து நகைக்கவோ, அல்லது அவசரமாக வந்து விழாமல் தடுத்து நிறுத்தவோ புவியீர்ப்பு விசை முயற்சி செய்யாது. 

பிரபஞ்ச விதிகள் நடுநிலையானவை. பிரபஞ்சத்தின் இந்த பாரபட்சமற்ற நடுநிலையைத்தான் தர்மம் என்கிறோம்.

இந்துக்கள் இதை ரித் (Rit) என்று கூறுகிறார்கள். இதுவே தலையாய தர்மமாகும். 

இது ஒருவனைத் தள்ளி விட்டு கீழே விழ வைக்காது; எழுந்து நிற்க உதவியும் செய்யாது. நீங்கள் சரியாக நடந்தால் இது உங்களைக் காக்கும். விழுவதற்கு ஆசைப்பட்டால் தடுமாறி விழுவதற்கு உதவும். உங்கள் விருப்பம் எதுவோ அதற்குத் துணை நிற்கும். 

எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒத்துப்போகும். விரும்பியபடி இந்த தர்ம விதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இது எளிதாகக் கையில் அகப்படவும் செய்கிறது. அதன் கதவுகள் திறந்தே இருக்கின்றன. 

மூடிக்கிடக்கும் கதவில் தலையை மோதிக் கொள்ள விரும்பினால் அப்போதும் தடை சொல்லாது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல முயன்றாலும் அனுமதி கொடுக்கும். 

தனக்கென்று எந்த சொந்த அபிப்பிராயங்களும் வைத்துக் 

கொள்ளாமல் இந்த விதி 

நடுநிலையோடு நடந்து கொள்கிறது.

No comments:

Post a Comment