Sunday, 13 October 2024

ஒரு கோப்பை வெறுமை வெறுமையாக இருக்கின்றது

 

ஒரு கோப்பை வெறுமை வெறுமையாக இருக்கின்றது


ஒருதடவை மவுலிங்கபுட்டர் என்னும் பெரிய தத்துவர், தன்னுடைய கேள்விகளுக்காக புத்தரை பார்க்க வந்தார் மவுலிங்கருக்கே ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர் பிரபலமான ஒரு தத்துவர். மிகவும் மதிக்கப்பட்டவர் பெரிய பண்டிதர்.

புத்தர் அவரிடமும் "இரண்டு ஆண்டுகள் என் அருகில் அமைதியாக இரும். பின்புதான் எனக்கும் உமக்கும் இடையில் ஏதாவது பரிமாற்றம் சாத்தியம் '' என்றதும், அவர் அவமதிப்புற்றார்.

அவர் சொன்னார், "நீர் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு மூடன் என என்னை நினைத்துக் கொண்டீரா? நீர் என்ன சொல்ல விரும்பினாலும் அதை இப்போதே சொல்லும் இரண்டு ஆண்டுகள் காத்திருப்பது எனக்கு அவசியமில்லை. வேதங்கள், உபநிடதங்கள், கீதை அனைத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிற போது உம்மை புரிந்துகொள்வது ஏன் முடியாது?"

புத்தர் சொன்னார், "வேதங்களையும் உபநிடதங்களையும் கீதையையும் நீர் புரிந்து கொண்டிருக்கிறீர் என்னும்போது இங்கே ஏன் வந்திருக்கிறீர்? உமது கேள்விகளுக்குத்தான் விடைகள் கிடைத்துவிட்டிருக்குமே!

உபநிடதங்களை நீர் புரிந்துவிட்டால் வேறு என்ன மிச்சம் உள்ளது ' அப்படியானால் என் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. எனவே போய்ச் சேரும்!''

அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கவே வேண்டும். ஐநூறு சீடர்களுடன் அவர் வந்திருந்தார் அவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் அவர் மிகவும் தகுதியான ஆளாகவே இருந்திருக்க வேண்டும் ஏனெனில் சொல்லப்பட்ட கருத்தை அவர் உணர்ந்து கொண்டார். அவர் சொன்னார்."அது சரிதான் நான் புரிந்திருந்தேன் என்றால் - உண்மை யாகவே புரிந்திருந்தேன் என்றால் - உம்மிடம் வந்திருக்க தேவை இருந்திராதுதான்.

என் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காததால் தான் உம்மிடம் வந்திருக்கிறேன் வேதங்கள் அனைத்தையும் உபநிடதங்கள் அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் அவை என் ஜீவனை உருமாற்றவில்லை"

அதற்கு புத்தர் சொன்னார். "நான் சொல்கிறதுபடி நடவும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த கேள்வியும் கூடாது. கற்றதை எல்லாம் கலைத்துவிடும் இரண்டு ஆண்டுகளுக்கு பேசாதிரும் அமைதியாக இங்கு அமரும்''

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போது அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் சிரிக்கத் தொடங்கினார். அவர் பெயர் சாரிபுட்டர். கவுதம புத்தரின் மாபெரும் சீடர்களில் ஒருவர்.

மவுலிங்க புட்டர் கேட்டார். "ஏன் இந்த ஆள் சிரிக்கிறார்?

இவருக்கென்ன மூளை குழம்பிவிட்டதா அல்லது வேறெதாவது ஆகிவிட்டதா?''

அவரையே கேளும்'' என்றார் புத்தர். கேட்டார் மவுலிங்கர். அதற்கு சாரிபுட்டர் புத்தரை காட்டி சொன்னார்.

"இந்த ஆள் உண்மையிலேயே மிகவும் தந்திரசாலிதான்'" - அதனால்தான் சிரித்தேன்.

நானும் உம்மைப் போலத்தான் வந்தேன். 2 ஆண்டுகள் பேசாமல் அமைதியாக இருக்குமாறு என்னிடமும் இவர் சொன்னார். அந்த 2 ஆண்டுகளில் என் கேள்விகள் யாவும் ஒழிந்தன.

இப்போது கேட்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆனால் அவரோ என்னிடம் கேட்டபடியே இருக்கிறார். 'சாரிபுட்டா. ஏன் நீ இப்போது கேட்கவில்லை?" என்று.

எனவே நான் உமக்கு சொல்லும் யோசனை என்னவென்றால், கேட்பதாய் இருந்தால் இப்போதே கேளும் கேட்க விரும்பவில்லை என்றால் அவர் சொல்கிறபடி கேளும் இரண்டு ஆண்டுகள் மவுனமாயிரும்.''

அப்படியே நடந்தது. சரியாக 2 ஆண்டுகளுக்குப் பின் புத்தர் மவுலிங்க புட்டரிடம் கேட்டார். "உமது கேள்விகள் எங்கே?"

அதற்கு அவர் சிரித்தார். குனிந்தார். புத்தரின் பாதம் பணிந்தார். பின்னர் சொன்னார் - "

அவை அமைதியில் மறைந்துவிட்டன. உங்களை வெறுமனே கவனித்தபடி, பார்த்தபடி இருந்ததன் மூலமே மெதுமெதுவாக என் தெளிவு மென்மேலும் அதிகரித்து வந்தது.

முற்றிலும் வேறுவிதமான ஒரு உறவுமுறை நேர்ந்திருக்கிறது. ஏதோ ஒரு பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது கேள்விகள் இல்லை பதில்களும் இல்லை. 

நான் முற்றிலும் நிறைவடைந்தவனாய் இருக்கிறேன் நான் வீடு சேர்ந்து விட்டிருக்கிறேன்."என்றார்.

புத்தர்கள் சொல்வதை கவனிப்பதற்கு குறிப்பிட்ட வெளி வித்தியாசமான தன்மைகொண்ட உள்வெளி தேவைப்படுகிறது.

மிகவும் அமைதியுடன் நீங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது. எந்த எண்ணமும் இன்றி கவனிக்க வேண்டி இருக்கிறது. எந்த முன்கருத்தும் தற்சாய்வும் இன்றி நீங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது.

சார்பாகவோ எதிராகவோ முன்முடிவு கட்டாதிருக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் சொல்வது சரியா தவறா என்பதைத் தீர்மானிக்க நீங்கள் பறக்கக் கூடாது.

சார்பாகவோ எதிராகவோ நில்லாமல் வெறுமனே கவனியுங்கள். பதற்றப் படாதீர்கள். 

உங்கள் மனம் ஓயாமல் திரிந்தபடி இருக்கிறது. தான் செவிமடுக்கிற ஒவ்வொன்றுக்கும் தன் சொந்த வண்ணத்தை தந்து கொண்டிருக்கிறது.

உங்கள் மனம் உங்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் மனம் உங்களை புத்திசாலி ஆக்கிக் கொண்டிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்.

ஆகவே உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் என்னுடைய பேச்சை நீங்கள் செவி மடுக்க தேவையில்லை.

என்னிடம் உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் உங்களுடைய கடந்த கால அறிவு, அனுபவம், மற்றும் சேர்த்து வைக்கப்பட்ட குப்பைகளை  கழற்றி வைத்துவிட்டு வரவும்.

உங்கள் கோப்பை காலியாக இருந்தால்தான், நான் அதில்  ஏதாவது ஊற்ற முடியும்.

No comments:

Post a Comment