Saturday, 25 November 2023

கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் பேசாலைதாஸ்

 கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் பேசாலைதாஸ்

ஒரு ஊரில் தர்ம சிந்தனை உள்ள பண்ணையார் ஒருவன் இருந்தான்.அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏகப்பட்ட உதவிகள் செய்துவந்தான்.

துன்பம் என்று வருபவர்க்கும்,உதவி என்று கேட்பவர்களுக்கும் அவன் இல்லையென்று சொன்னதில்லை.

அந்த ஊரே அவனை வாழ்த்தியது.அதே ஊரில் ஒரு கஞ்சனும் இருந்தான்.யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை.ஊர் அவனை எப்பொழுதும் ஏசியது.

அந்த இருவரும் எப்பொழுதாவது சந்திக்க நேரும்போது பண்ணையார் கஞ்சனை ஏளனமாக பார்ப்பது வழக்கம்.

ஊர் தன்னை புகழ்வதிலும்,கஞ்சனை திட்டுவதிலும் அவர் பெருமை கொண்டார்.

ஓர் நாள் பண்ணையார் வீட்டில் அன்னதானம் நடந்தது.மொத்த ஊரும் அங்கு பசியாறிக்கொண்டிருக்க கஞ்சன் மட்டும் தன்னுடைய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான்.

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் பசியாக இருப்பதாகவும் தனக்கு உணவும் நீரும் கிடைக்குமா என்றும் கஞ்சனை கேட்டான்.

கஞ்சன் சொன்னான் நான் உனக்கு உணவு தர முடியாது அதோ பார் பண்ணையார் வீடு அங்கு போனால் உனக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினான்.

ஆண்டுகள் பல கடந்தது.

பண்ணையாரும்,கஞ்சனும் மரணித்தனர்.மரணத்துக்கு பின்னான தீர்ப்பு அலுவலகத்தின் வாயில் படியில் இருவரும் நின்றிருந்தனர்.

சொர்க்கத்தின் நிர்வாகி கஞ்சனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு பண்ணையாரை நரகத்துக்கும் அனுப்ப உத்தரவிட்டார்.

பண்ணையார் கேட்டார் இது என்ன அநியாயம் 'அவன் ஒரு கஞ்சன்,நான் தர்மம் அல்லவா செய்தேன்?அவனுக்கு சொர்க்கம் எனக்கு நரகமா? 

நிர்வாகி சொன்னார்...அவன் கஞ்சன் ஆனாலும் தன்னிடமுள்ள எதையும் இங்கு எடுத்து வரவில்லை.அங்கேயே விட்டுவிட்டுதான் வந்திருக்கிறான்.அது எப்பொழுது யாருக்கு எங்கு சேர வேண்டுமோ அங்கு போய் சேர்ந்துவிடும்.

ஆனால் நீ கொடுப்பதில் பெருமை கொண்டாய்.ஏழைகளுக்கு உதவி செய்வதில் கருணையும் அன்பும் இருப்பதற்கு பதிலாக கர்வமும்,பெருமையும் மட்டுமே இருந்தது உன்னிடம்.

உணவு வழங்கிய நிகழ்வில் ஒருவன் மட்டுமே தர்மத்தை பெற்றுக்கொண்டவன்  ஆவான்.

அவன் அந்த கஞ்சன் மட்டுமே.

வழிப்போக்கனுக்கு  உணவை காட்டிய கஞ்சனிடம் பெருமை இல்லை. சிறிதளவேனும் அன்பு இருந்தது.

--------------------------------------------------------------------

கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் அது உங்களுடையது அல்ல.

அன்பு செலுத்துங்கள். எதுவும் இல்லாவிட்டாலும்.

No comments:

Post a Comment