Saturday, 25 November 2023

உணர்வு மனம், பேசாலைதாஸ்

  உணர்வு மனம், பேசாலைதாஸ்

ஒரு மராத்தியர் ஒருவர் என் நண்பராக இருந்தார். அவர் இருபது ஆண்டுகளுக்குமேல் ஜெர்மனியில் வசித்து வந்தார்.

இருபது ஆண்டுகளாக அவர் ஜெர்மன் மொழியையே பயன்படுத்தி வந்தார்.

தன் தாய்மொழியான மராத்தியை அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார். மராத்தியில் அவரால் பேச முடியாது. மராத்தியை அவரால் படிக்க முடியாது.

தாய் மொழி பயன்படுத்தப்படாததால் உணர்வு மனத்திலிருந்து அம்மொழி முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டது.

ஒரு சமயம் அவருக்கு நோய்கண்டது அப்போது சிலநேரங்களில் உணர்விழந்து போவார். அவர் உணர்வு அற்றவரான போதெல்லாம் முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆளுமை அவரிலிருந்து வெளிப்படும்.

வித்தியாசமான ஒரு முறையில் அவர் நடந்துகொள்ளத் தொடங்குவார்.

தான் உணர்வற்றிருக்கும் போது அவர்  மராத்திச் சொற்களையே உச்சரிப்பார்.

மேலும் அந்த நிலையிலிருந்து மீண்டு உணர்வுநிலைக்குத் திரும்பியவுடன் சில நிமிடங்களுக்கு அவரால் ஜெர்மன் மொழியைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இவை எப்படி நிகழ்கிறது என்றால்,

உணர்வு மனம், உணர்வற்ற மனம், என்று மனம் இரண்டு விதமாக செயல்படுகிறது.

நீங்கள் உணர்வு மனதின் மூலம் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறீர்கள். உணர்வற்ற மனம் அதை பதிவு செய்து கொள்கிறது. பின்பு உணர்வற்ற மனமே காரை ஒட்டி செல்கிறது.

இப்பொழுது உங்கள் உணர்வு மனம் பாட்டு கேட்கலாம், பேசிக் கொண்டிருக்கலாம். கார் ஓட்ட உங்கள் உணர்வுமனம் செயல்படத் தேவையில்லை.

உணர்வு மனத்தால் மது அருந்த பழகுகிறீர்கள். பின்பு உணர்வற்ற மனதால் அது ஒரு பழக்கமாகி விடுகிறது.

ஒரு கவிதையை சொல்வதற்கு முதலில் உணர்வு மனதை கொண்டு  இரண்டு மூன்று முறை நீங்கள் அதை பார்த்து படிக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உணர்வற்ற மனம் அதை பற்றிக்கொண்டு பார்க்காமல் படிக்கச் செய்து விடுகிறது.

உணர்வு மனதால் ஆரம்பத்தில் மனைவிக்கு பயந்தால் பின்பு அது உணர்வற்ற மனதால் பின் தொடரப்படுகிறது.

நீங்கள் எதையெல்லாம் திரும்பத் திரும்ப உணர்வு மனதால் செய்கிறீர்களோ அதை எல்லாம் உணர்வற்ற மனம் ஒரு பழக்கமாக்கி விடுகிறது.

இந்த உணர்வற்ற மனமே உங்களை ஆட்சி செய்கிறது. எல்லாவற்றிலும் உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

நீங்கள் உணர்வு மனதின் மூலம் இனி மது அருந்தக் கூடாது, மனைவிக்கு பயப்படக்கூடாது  என்று நினைக்கலாம். ஆனால் அதை நிர்வகிப்பது உணர்வற்ற மனம்.

ஆனால் அதை உங்களால் செயல்படுத்த முடியாது.

அது இப்பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. போகப் போக இந்த உணர்வற்ற மனதில் என்னவெல்லாம் பதிவாகியுள்ளது என்று உங்களுக்கு தெரியாது.

குழந்தை பருவத்தில் நடப்பவைகளே அதிகமாக பதிவாகி விடுகிறது.

நீங்கள் நல்ல பழக்கங்களை பழகிக் கொண்டே போகலாம். நீங்கள் நல்லவர் என்று எண்ணிக் கொண்டும் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே செய்த தீய செயல்கள் உங்கள் உணர்வற்ற மனதில் பதிவாகி இருக்கும்.

அது திடீரென உங்களை அறியாமல் வெளிப்படும். இந்த நிலையில் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாது.

இந்த நிலையில் உணர்வு மனதிற்கும் உணர்வற்ற மனதிற்கும் உங்களுக்குள் ஒரு ஓயாத போராட்டம் எப்பொழுதும் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் உணர்வு மனம் மூலம் நீங்கள் ஒன்றை செயல்படுத்த நினைக்கிறீர்கள்.ஆனால் உணர்வற்ற மனம் வேறு ஒன்றை செய்து கொண்டு போகிறது.

போகப்போக உணர்வற்ற மனமே உங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. இப்பொழுது நீங்கள் நீங்களாக இருக்க முடியாது.

ஏற்கனவே பழகிய உங்களுடைய பழக்கங்களே உங்களை ஆட்சி செய்கிறது.

இந்த முரண்பாடுகளில் இருந்து வெளியே வருவதே விடுதலை. 

இந்த உணர்வற்ற மனதின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், வெளியே வருவதற்கும் உங்களுக்கு உதவுவதே தியானம்.

தியானத்தால் மட்டுமே அது சாத்தியம்.

No comments:

Post a Comment