Thursday, 23 November 2023

சொர்க்கத்தின் வாசலில் பேசாலைதாஸ்

 சொர்க்கத்தின் வாசலில்   பேசாலைதாஸ்

குரு ஒருவர் இறக்க நேர்ந்தது. அந்த துறவி மிகவும் பிரபலமானவர் உலகம் முழுவதற்கும் தெரிந்தவர் பல மக்கள் அவரை வணங்கினார்கள். அவர் ஞானமடைந்து விட்டார்என்று நினைத்தார்கள். அதே நாளில் ஒரு விபசாரியும் இறந்தாள்.

அவள் அந்த துறவியின் கோயிலுக்கு முன்னால் தான் வாழ்ந்து வந்தாள். அவளும் ஒரு பிரபலமான விபசாரி. அந்த துறவி எவ்வளவு பிரபலமோ அவ்வளவு.

இரண்டு துருவங்களான இவர்கள் அருகருகே வாழ்ந்து, ஒரே நாளில் இறந்தும் போனார்கள்.

இறப்பின் தேவதைகள் வந்து, துறவியின் உடலை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றன. இறப்பின் மற்ற தேவதைகள் வந்து விபசாரியை நரகத்திற்குக் கொண்டு சென்றன.

அந்த தேவதைகள் சொர்க்கத்தை அடைந்து சாத்தப்பட்டு இருந்த கதவை அவை தட்டிய போது,

அதற்குப் பொறுப்பான ஒருவன். "நீங்கள் குழப்பி விட்டீர்கள். இந்தத் துறவி நரகத்திற்குச் செல்ல வேண்டும் அந்த விபசாரி சொர்க்கத்திற்குக் கொண்டு வரப்ப படவேண்டும்" என்றான்

அந்த தேவதைகள் கேட்டன : "என்ன சொல்கிறாய்? இந்த மனிதன் மிகப் பிரபலமான ஒரு துறவி தொடர்ந்து தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தவன் அதனால் தான் நாங்கள் விசாரணை கூட செய்யவில்லை.

நாங்கள் சென்று இவரை இங்கு எடுத்துக் கொண்டு வந்துவிட்டோம். அந்த விபசாரியை வேறு சில தேவதைகள் அவளை நரகத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டன என்றாள்.

கதவிற்குப் பொறுப்பானவன் சொன்னான் : "நீங்கள் குழம்பி விட்டீர்கள் : ஏனெனில் நீங்கள் வெளிப்புறத்தை மட்டுமே பார்த்தீர்கள்.

அந்தத் துறவி மற்றவர்களின் பொருட்டுதான் தியானம் செய்தான், ஆனால் அவனுக்குள் எப்போதும் 'நான் வாழ்க்கையை இழந்து விட்டேன் அந்த விபசாரி எவ்வளவு அழகாக இருக்கிறாள். அதுவும் கைக்கெட்டும் தூரத்தில் நான் தெருவைக் கடக்கும் எந்தக் கணத்திலும் அவள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நான் நிறைய தேவையில்லாதவற்றைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். பிரார்த்தனை, புத்தரின் சிலைக்கு முன்னால் உட்கார்ந்திருத்தல், பலன்தான் ஒன்றுமில்லை' என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான்.

பல மக்கள் ஒழுக்கமாக இருப்பதற்குக் காரணம், இவனைப் போல் பயந்தாங்கொள்ளியாக இருப்பதால் தான் அவன் ஒழுக்கமாக இருந்தான் ஏனெனில் அவன் பயந்தாங்கொள்ளி - அவனால் அந்தத் தெருவைக் கடக்க முடியாது மக்களுக்கு அவனைத் தெரியும் ; எப்படி அவனால் விபசாரியிடம் செல்ல முடியும் ? மக்கள் என்ன சொல்வார்கள்?

பயந்தாங்கொள்ளிகள் எப்போதும், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மற்றவர்களின் கருத்தைப் பற்றியே பயந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் அவன் கடைசி வரை துறவியாகவே, விரதமிருந்து கொண்டே இருந்தான்.

ஆனால் அவன் மனம் எப்போதும் விபசாரியுடனே இருந்தது அங்கே பாட்டு, நடனம் எனக் கேட்டபோதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.

புத்தர் சிலைக்கு முன் உட்கார்ந்திருந்தான், ஆனால், அவன் கனவில் அந்த விபசாரியுடன் காதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருப்பான்.

அந்த விபசாரியோ அவள் எப்போதும் வருந்தினாள். வருந்திக் கொண்டுதானிருந்தாள். அவளுக்குத் தெரிந்தது தன் வாழ்வை வீணடித்து விட்டோம் என்று.

பொன்னான வாய்ப்பை அவள் வீணாக்கிவிட்டாள். எதற்காக? பணத்திற்காக அவளின் உடலையும், ஆன்மாவை யும் விற்றுக் கொண்டிருந்தாள்.

அவள் எப்போதும் அந்த துறவியின் கோயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த அமைதியான வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்பட்டாள். அங்கு என்ன தியானம் நடந்து கொண்டிருந்தது?

அந்தக் கோயிலினுள் சென்று பார்க்க வேண்டும். எனக்கடவுளிடம் வேண்டினாள். ஆனால் அவள் நினைத்துக்கொண்டாள்:

"நான் ஒரு விபசாரி, புனித மற்றவள், நான்

அந்தக் கோயிலுக்குள் நுழையக்கூடாது." என்று.

அதனால் அவள் கோயிலின் வெளிப்புறத்தைச் சுற்றி நடந்தாள். வெளியில், தெருவில் இருந்த படியே அதைப் பார்த்தாள் என்ன அழகு,

என்ன அமைதி, என்ன ஆசிர்வாதம் உள்ளே அங்கே கீர்த்தனையும், பஜனையும், பாட்டும், நடனமும் இருக்கும்போதெல்லாம், அவள் புலம்பி, கதறி, அழுவாள். அவள் இழந்தைப் பற்றி யோசிப்பாள்.

அதனால், அந்த வாயிற் காவலன் சொன்னான் "அந்த விபசாரியை சொர்க்கத்திற்குக் கொண்டு வாருங்கள், இந்தத் துறவியை நரகத்திற்கு இட்டுச் செல்லுங்கள் என்று.

உங்கள் வெளி உலக வாழ்க்கையைப் பற்றி கடவுளுக்கு சிறிதும் அக்கறை இல்லை. உங்கள் உள் உலகம் எப்படிப்பட்டது என்பதே முக்கியம்.

மற்றவர்கள் முன்பு நீங்கள் நடிக்கலாம். உங்களுக்கு நீங்களே நடிக்க முடியாது. உங்களுக்கு உங்களைப் பற்றி முழுமையாக தெரியும்.

கடவுளுக்கும் கூட.

No comments:

Post a Comment