குடிகார தியானம் பேசாலைதாஸ்
ஒரு குடிகாரன் வந்து கேட்கிறான்: "நான் ஒரு குடிகாரன். நான் தியானம் செய்வது எப்படி?"
அந்தத் துறவி, "அதற்கு முதல் நிபந்தனை, நீ குடிப்பதை விட வேண்டும். அப்போதுதான் தியானம் செய்ய முடியும்" என்கிறார்.
இந்த நிபந்தனைகள் தற்கொலைக்குக் கொண்டு செல்வதாயுள்ளன.
ஒரு மனிதன் குடிகாரனாய் அல்லது திருடனாய் அல்லது ஒழுக்கக் கேடானவனாய் இருக்கக் காரணம் அவன் அமைதியற்ற, நலக்குறைவு கொண்ட மனதுடன் இருப்பது தான்.
இவை நோயுற்ற மனத்தின் விளைவுகள். தொடர் நிகழ்வுகளே. அப்படியிருக்கையில் அவனிடம், "முதலில் நலமடை. பிறகு நீ தியானம் செய்யலாம்" என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பிறகெதற்குத் தியானம் தேவை? தியானம் மருந்து போன்றதே. அது ஒரு மருந்தே.
தந்த்ரா ஒழுக்கம் கடந்தது. அது உன்னிடம் நீ யார் என்று கேட்பதில்லை.நீ இதுவரை ஒழுக்கமாக இருந்திருக்கவேண்டும் என்ற விதி இல்லை.
நீ ஒரு மனிதனாயிருப்பது போதும். நீ எங்கிருந்தாலும், நீ எப்படியிருந்தாலும், நீ ஏற்றுக் கொள்ளப்படுகிறாய்.
உனக்குப் பொருந்துகின்ற ஒரு உத்தியைத் தேர்ந்தெடு. உன்முழு சக்தியையும் அதில் கொடு. அதன் பின் நீ பழைய ஆளாகக் கண்டிப்பாக இருக்க மாட்டாய்.
உண்மையான, ஆதாரபூர்வமான உத்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும்.
நான் நிபந்தனைகளை விதிக்கிறேன் என்றால்,என்னிடம் போலியான உத்தியே இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது.
நான் சொல்கிறேன், ''முதலில் இதைச் செய்.. அதைசெய்யாதே என்றெல்லாம் சொல்லுவது சாத்தியம் இல்லாதது.
ஒரு திருடனால் திருடும் செயலை விட்டுவிட முடியும். ஆனால் அவன் உள்ளத்தில் திருட்டுத்தனம் இல்லாதவனாக மாற முடியாது.
ஒரு பேராசைக்காரன், பேராசைப்படும் பொருட்களை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் பேராசையில்லாதவனாக மாற முடியாது. நீ அவனிடம் திணிக்கலாம். அல்லது அவனே அவன் மீது பேராசையற்ற தன்மையைத் திணித்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் கூட ஒரு விதப் பேராசையின் அடிப்படையிலேயே இருக்கும்.
சொர்க்கம் கிடைக்குமென்று வாக்குறுதி வழங்கப்பட்டால், அவன் பேராசையற்றவனாயிருக்க முயற்சி செய்யக் கூடும். ஆனால் இது எல்லாவற்றையும் மீறிய பேராசையாக மாறிவிடும்.
சொர்க்கம், மோட்சம், விடுதலை, சத் - சித் - ஆனந்த், பிரபஞ்ச இருப்பு, முழு உணர்வு நிலை, பரம சுகம் - இவை அவன் பேராசை கொண்ட பொருட்களாயிருக்கும்.
தந்த்ரா சொல்கிறது. நீ மனிதனை, மாறக் கூடிய ஆதாரபூர்வமான யுக்திகளை கொடுக்கா விட்டால், மாற்ற முடியாது.
வெறும் போதனைகளால் எதுவும் மாறியதில்லை. இதை நீ உலகம் முழுவதும் பார்க்கலாம்.
கணக்கிலடங்கா போதனைகள், கணக் கில்லாத ஒழுக்கக் கோட்பாடுகள், ஏராளமான பூசாரிகள். போதகர்கள், ஓதுவார்கள் - உலகம் முழுவதும் இவர்களால் நிறைந்து வழிகிறது.
ஆனாலும் எல்லாம் அவ்வளவு அசிங்கமாகவும், அவ்வளவு ஒழுக்கக் கேடாகவும் இருக்கிறது.ஏன்?
ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறது? உன் ஆஸ்பத்திரிகளை இந்தப் போதகர்களிடம் கொடுத்தால், அதுவும் இப்படியாகி விடும். அவர்கள் அங்கும் போய் போதனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
மேலும் அவர்கள் அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளியையும், "நீ பாவி! நீதான் இந்த நோயை உண்டாக்கிக் கொண்டாய்; நீயே இப்போது இந்த நோயை மாற்று” என்று நினைக்கச் செய்துவிடுவார்கள்.
ஓதுவார்களிடம் ஆஸ்பத்திரிகள் கொடுக்கப்பட்டால்: அந்த ஆஸ்பத்திரிகளின் நிலை எப்படி இருக்கும்? இந்த முழு உலகமும் இருக்கும் நிலைக்கு வந்துவிடும்.
போதகர்கள் போதித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் தொடர்ந்து, "கோபம் கொள்ளாதே" என்று எந்தவித யுக்தியும், டெக்னிக்கும் கொடுக்காமலே சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.
நாம் இதை நீண்ட நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருப்பதால், நாம் இந்தக் கேள்வியைக் கூட ஒருபோதும் எழுப்புவதில்லை.
"நீ என்ன சொல்கிறாய்? நான் கோபத்தோடு இருக்கிறேன். நீ என்னிடம் "கோபம் கொள்ளாதே" என்று சும்மா சொன்னால் போதுமா? எப்படி அது சாத்தியம்? நான் கோபமாய் இருக்கும்போது அதன் அர்த்தம் "நான்" இப்போது கோபமாய் இருக்கிறேன்'' என்பதே.
நீ சும்மா சொல்கிறாய்? "கோபப்படாதே என்று. அப்படியானால் நான் என்னையே அமுக்கிக் கொள்ளத்தான் வேண்டுமா எந்த யுக்தியும் இல்லாமல்?
ஆனால் அப்படி அமுக்கிக் கொள்வது அதிக கோபத்தையே உண்டு பண்ணும். அது குற்றவுணர்வைத் தோற்றுவிக்கும்.
ஏனெனில் நான் என்னை மாற்றிக் கொள்ள முயன்று, அப்படி என்னை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அது தாழ்வு மனப்பான்மையையே உண்டாக்கும்.
அது எனக்கு நான் ஒரு பாவி என்ற உணர்வையே, அதாவது நான் கையாலாகாதவன்.. என்னால் எனது கோபத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்ற உணர்வையே கொடுக்கும். யாரும் வெற்றி பெற முடியாது!
உனக்குச் சில ஆயுதங்கள் தேவை. உனக்குச் சில யுக்திகள் தேவை. ஏனெனில், உனது கோபம் என்பது அமைதியற்ற மனத்தின் ஒரு அடையாளமே. அமைதியற்ற மனதை மாற்றி விட்டால் அதன் அடையாளமும் மாறிவிடும். கோபம், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவ்வளவே. உள்ளே உள்ளதை மாற்று; அப்போது வெளியே உள்ளது மாறிவிடும்.
ஆகவே தந்த்ரா, உனது ஒழுக்கம் என்ற பெயரில் அழைக்கப் படுவதைப் பொருட்படுத்துவதில்லை. உண்மையில், ஒழுக்கத்தை வற்புறுத்துவது கீழானது; சிறுமைப்படுத்துவது;
அது மனிதத் தன்மையில்லாதது. என்னிடம் வரும் ஒருவரிடம் நான், "கோபத்தை முதலில் விடுங்கள், செக்ஸை முதலில் விடுங்கள், இதை விடுங்கள், அதை விடுங்கள்" என்று சொன்னால், நான் மனிதத் தன்மையில்லாதவன்.
நான் சொல்வது சாத்தியமில்லாதது. இப்படிச் சாத்தியமில்லாமல் போவது அந்த மனிதனை அவனுக்குள்ளேயே கூனிக் குறுகச் செய்யும்.
அவன் தாழ்ந்தவனாக உணர ஆரம்பிப்பான். அவன் அவனுக்குள்ளேயே, அவன் சொந்தக் கண்களின் முன்பே சிறுமை அடைவான். சாத்தியமில்லாததை அவன் முயற்சி செய்து பார்த்தால், அவன் தோல்வியே அடைவான்.
போதகர்கள் இந்த உலகம் முழுவதையும் “நீங்கள் பாவிகள்” என்று உறுதியாக நினைக்கச் செய்து விட்டார்கள். இது போதகர்களுக்கு நல்லது. ஏனெனில் நீ இப்படி நம்பவில்லை யென்றால், அவர்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாது.
நீங்கள் கண்டிப்பாகப் பாவிகளாயிருக்க வேண்டும். அப்போது மட்டுமே சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் எல்லாம் தொடர்ந்து கொழிக்க முடியும். உங்கள் ஜீவிதம் பாவமாய் இருப்பதே அவர்களது வெற்றி.
உன் குற்றவுணர்வே மிக உயர்ந்த சர்ச்சுகள் எல்லாவற்றின் அஸ்திவாரம்.
நீ அதிக குற்றவுணர்வு கொண்டிருந்தால், அதிக சர்ச்சுகள் மேலும் மேலும் அதிக உயரங்களை எட்டும்.
அவை உனது குற்றவுணர்வின் மேல், உன் பாவத்தின் மேல், உன் தாழ்வு மனப்பான்மையின் மேலேயே கட்டப்பட்டுள்ளன.
இப்படியாகத்தான் அவை, தாழ்ந்த மனித குலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தந்த்ரா, உன் ஒழுக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுவதைப் பற்றி, உன் சமூக முகதாட்சண்யங்கள், இன்னும் இது போன்றவை பற்றி அக்கறைப்படுவதில்லை.
இதன் அர்த்தம், தந்த்ரா ஒழுக்கக் கேடாயிருக்கச் சொல்கிறது என்பதல்ல! தந்த்ரா, உன் ஒழுக்கத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொண்டதாக இல்லை.
ஆகவே ஒழுக்கக் கேட்டைப் பற்றியும் அது சொல்வதில்லை. தந்த்ரா மன மாற்றத்திற்கான விஞ்ஞான பூர்வமான யுக்திகளைக் கொடுக்கிறது.
இப்படி மனம் மாற்றமடையும் போது உன் குணாதிசயமும் மாறும். உன் அடிப்படை கட்டமைப்பே மாறும்போது, உன் முழுக் கட்டமைப்பும் மாறிப் போகும்.
ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி பொருளை மாற்ற முடியும் என்றால் மனதையும் ஒரு உத்தியைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பதை அறிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஒரு மருந்து எப்படி நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் நோயை குணப்படுத்துகிறதோ அதுபோலவே தந்த்ராவும்.
No comments:
Post a Comment