Saturday, 25 November 2023

மரணம் பலவழி பேசாலைதாஸ்

மரணம் பலவழி  பேசாலைதாஸ்

 




ஒவ்வொரு நாள் காலையிலிருந்தும் மரணம் உன்னை தொடர ஆரம்பிக்கிறது. 

இறைச்சலின் உச்சபட்ச ஒலிதான் மரணம். மரணம் வெவ்வேறு வழிகளில் வருகிறது. நீ சாவது ஒருவகையான மரணம் மட்டுமே.

இன்னும் பல மரணங்கள் உண்டு..

உன் அன்னை இறந்தால் நீயும் தான் இறக்கிறாய். ஏனெனில் அன்னையின் ஒரு பகுதிதான் நீ. அந்த பகுதி அப்போது இறந்துவிடுகிறது.

உன தந்தை இறந்தால் உன் சகோதரன் உன் சகோதரி உன் நண்பன் என யார் இறந்தாலும் உன்னுடைய  ஒரு பகுதி இறக்கத்தான் செய்கிறது.

உன் விரோதி இறக்கும்போது ஒரு பெரும்பகுதி உன்னுள் இறந்துவிடுகிறது. ஒவ்வொருவரின் மரணத்தின் முடிவிலும் நீ வேறுவிதமாக மாறிவிடுகிறாய்.

நீ பிறந்தவுடன் குழந்தையாக இருக்கிறாய். பின்பு இளைஞனாக மாறுகிறாய், பின்பு முதுமையை அடைகிறாய். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் நீ இறந்துகொண்டுதான் இருக்கிறாய். குழந்தை பருவத்தை நீ கடக்கும்போது அதற்கான கதவு மூடப்படுகிறது. நீ இறந்து இளைஞனாக மாறுகிறாய். இன்னும்போனால் ஒவ்வொரு கனத்திலும் உன்னுடைய ஒருபகுதி மாற்றமடைந்து வேறொரு பகுதி நுழைவதை உணர்வாய். அப்போது ஒவ்வொரு கனமும் மரணம் உன்னை கடந்து தான் செல்கிறது. அந்த மரணங்கள் எந்த தடயமுமில்லாமல் உன்னை கடந்து சென்றுவிடுகின்றன.

மற்றொரு நுண்ணிய மரணமொன்றுண்டு. அது தான் காதல். காதல் என்பது தூய்மையான மரணம். யாராவது மரணமடைய விரும்பினால் அவர்கள் காதலில் விழலாம்.எல்லோரும் காதலை விவாதிக்கிறார்கள் புத்துணர்வு கொள்கிறார்கள்.ஆனால் பெரும்பாலோர் காதலில் இறங்க பயப்படுகிறார்கள் . ஏனென்றால் காதல் என்பது மரணம். காதல் அச்சம் கொள்ளவைக்கிறது. காதலிக்கும் இருவரில் ஒருவருக்குள் இன்னொருவர் இறந்து தான் ஆகவேண்டும். அது தான் காதல். மற்றதெல்லாம் ஒரு விளையாட்டு தான். இந்த விளையாட்டு காதலெல்லாம் பேச்சளவில் தான் இருக்கும். உண்மையாக காதலிப்பதற்கு பயப்படுவதன் காரணம் மரணிக்க தயாராக இல்லாதது தான் காரணம். ஒருவன் தன் இணைக்குள் மரணிக்காமல் காதலில் இறங்கமுடியாது.

தியானம் என்பது மற்றொரு மரணமாகும். உனக்குள் நீ மரணிக்கும் நிகழ்வாகும்.இதுவரை படித்திருப்பாய், கேள்விப்பட்டிருப்பாய். ஆனால் நீயாக தியானத்திற்குள் நுழையும்போது உன்னை நீ முற்றிலுமாக இழந்துவிடுகிறாய். விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தியானமானது ஒருவரை ஆழமான நிரந்தர மரணத்தில் தள்ளிவிடுவதும் உண்டு.

நீ ஒரு குருவிடம் சரணாகதியடையும்போது மற்றொரு மரணம் நிகழ்கிறது.

அது உன் அகங்காரத்தின் மரணம்.

ஒரு கட்டத்தில் உன் அகங்காரம் மறைந்தே போய்விடுகிறது. மேற்கண்ட மரணங்களை தன்னுள் கொண்டது தான் வாழ்க்கை.

மனிதர்களின் மரணங்கள் மட்டும் உன்னுள் மரணத்தை தோற்றுவிப்பதில்லை. உன் செல்ல நாய் மரங்கள் செல்லபிரானிகள் ஒரு அழகிய பறவை என எவை மரணித்தாலும் உனக்குள் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. பிரபஞ்சத்தில் மரணம் நிகழ்வதும் மீண்டும் உயிர்கள் தோற்றுவிக்கப்படுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்.

மரணம் என்பது பிரபஞ்ச மாயையாகும்.

No comments:

Post a Comment