மனதை தூய்மையாக வைத்திருப்பது எப்படி. ?
மனிதர்களில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் கேடு நினைப்பவர்களாகவும் இருப்பது எதனால் ?
எல்லோரும் ஒரே சமூகத்தில், அதே கல்வி முறையில், அதே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதே சூழலில் , கண்டும் கற்றும் வாழும் போது, அவர்களின் குணங்களும் எண்ணங்களும் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும். இந்த வேறுபாடு எதனால் ஏற்படுகின்றது ?
ஒருவனது குணத்தை தீர்மானிப்பது அவனது மனம் தான்.
மனம் என்பது நம்மை சுற்றி நடப்பதை எல்லாம், நாம் பார்த்ததும், கேட்டதும், உணர்ந்ததும், என அனைத்தையும் தன்னுள் பதிவு செய்து வைத்து கொள்ளும்.
அதன் பின், மனம் எடுக்கும் முடிவுகளில் இந்த பதிவுகளின் தாக்கத்தை காண முடியும்.
ஒருவன் பிறந்த சூழ்நிலை, அவன் கடந்து வந்த பாதை, அவன் சுற்றம் அவனை எதிர்கொண்டு நடத்திய விதம், அவனிடமிருந்து எதிர்பார்ப்பு, அவனை அதிகம் பாதித்த விஷயங்கள், அவன் தனக்கென்று உருவாக்கி கொண்டுள்ள “நான்” என்ற பிம்பம், என இவை எல்லாம் அவனுள் எண்ண ஓட்டங்களாக, அவன் எடுக்கும் முடிவுகளில் பிரதிபலிக்கும்.
மனதில் உள்ள பதிவுகள் நல்லவைகளாக இருந்தால், எண்ணங்கள் நல்லவைகளாக இருக்கும், அவன் எடுக்கும் முடிவுகள் நல்லவைகளாக இருக்கும்.
அறிந்தோ அறியாமலோ மனதில் ஏறிய குப்பைகளை களைவது எப்படி ?
கணினியாக இருந்தால் மொத்தமாக அழித்துவிட்டு (format) ரீ-ப்ரோக்ராம் செய்து விடலாம்.
ஆனால் இது மனம். இதில் பதிவேறிய எதிர்மறை எண்ணங்களை நீக்கம் செய்ய, இரண்டு கட்டங்களான முயற்சி தேவை.
முதலில் எது எது தேவையற்ற, எதிர்மறையான, பயனற்ற பதிவுகள் என்பதை கண்டறிய வேண்டும்.
இது சுலபமான காரியமல்ல.
முதற்கட்டமாக நமது மனதை ஆராய்து, அதிலுள்ள பதிவுகளை பாகுபடுத்துதல்.
சில பதிவுகள் ஆழ்மனதின் ஆழத்தில் சென்று பதுங்கி இருக்கும். அத்தகைய பதிவுகள் நம் மனதில் உள்ளதே நமக்கு தெரியாது.
சில பதிவுகள் நம் மனதில் திரும்ப திரும்ப வந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும். சில பதிவுகள் நம்மை வைராக்கியத்துடன் செயல்பட வைக்கும், சில பதிவுகள் நம்மை ஆழ்ந்த துயரத்திற்கு அழைத்து செல்லும், சில பதிவுகள் நமது நிம்மதியை கெடுத்து உறங்க விடாமல் செய்யும், சில பதிவுகளை நாமே திரும்ப திரும்ப நினைத்து பார்த்து மகிழும் படி இருக்கும்.
இப்படி பதிவுகளின் கூட்டு கவலையாக உள்ள நம் மனதை, ஆராய்ந்து, பாகுபடுத்தி, நல்ல பதிவுகள், தேவையற்ற பதிவுகள் என எப்படி வேறுபடுத்திக் பார்ப்பது ? மனதை ரீ-ப்ரோக்ராம் செய்வது சாத்தியமா ?
இரண்டாம் கட்டமாக, இப்படி நம் மனதையும் அதன் எண்ண ஓட்டங்களையும் அறிந்து கொண்டபின் செய்ய வேண்டியது என்ன ?
நம் முன்னோர்களான ஞானிகள் இதற்கு தியானத்தில் மூலம் வழி கண்டு உள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் அவர்கள் கண்டுள்ள வழி மனோவசியம் எனப்படும் Hypnotism . அதில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மட்டுமே இதை கையாள முடியும். சுயவசியம் (self hypnosis) செய்வது மற்ற சிறு சிறு செயல்களுக்கு வேண்டுமானால் உபயோகப்படும். இதை சரியாக செய்யாவிட்டால் பக்க விளைவுகள் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
ஆனால், எந்த வித பாதிப்புமின்றி, நமது மனதை ஒருநிலை படுத்தி, எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி, தேவையற்ற குப்பைகளை களைந்து, மனதை சுத்தப்படுத்த உள்ள மிக சிறந்த வழி தியானம் மட்டுமே. தியானமும் ஒரு விதத்தில் சுயவசியம் போன்றது தான் என்றாலும், இங்கு நாம் நமது மனதின் எல்லா பரிணாமங்களையும் ஆராய்ந்து பார்த்து, உள்ளிருந்து சீர் செய்வதால், இதன் பலன் அதிகமானது.
தியானம் மனதை அமைதிப்படுத்த மட்டுமல்ல, நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து, அடக்கம், பணிவு, நன்றியுணர்வு, அன்பு, கனிவு என நம்மை மொத்தமாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.
தீய எண்ணங்களை அடையாளம் கண்டு, பகை, பொறாமை, வஞ்சனை, பழிவாங்குதல், பேராசை, சுயநலம், போதை வஸ்துக்களில் அடிமைபடுதல், ஆகியவைகளில் இருந்து மீண்டு, அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, நீக்கவும், மாற்றவும், செய்து, தியானத்தின் மூலம், தன்னை முழுமையாக உணர்ந்து, நல்ல எண்ணங்களை மட்டுமே பிரதிபலிக்கும் தூய மனதாக மாற்ற இயலும்.
தியானம் ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும், தன்னை நேர் வழி படுத்தவும், முழுமையாக தன்னை உணருவதற்கும், தனது மனதை நற்சிந்தனைகள் பூக்கும், நல்லெண்ணங்கள் மட்டுமே பிரதிபலிக்கும் தூய மனதாக மாற்ற முடியும். இது வயது வித்தியாசமின்றி அனைவராலும் மேற்கொள்ள இயலும்.
தியானம் செய்து, மனதை தூய்மைபடுத்தி, தன்னை உணருதலால் உள்ள ஒரே பக்கவிளைவு, அது தானாகவே நம்மை இறைதன்மைக்கு அழைத்து சென்று விடும்.
தூய மனதானது இந்த இயற்கையை, அதன் உண்மையான பரிமாணத்தில் காண தொடங்கும். அதன் படைப்பாற்றலை கண்டு வியக்கும். இயற்கையினிடத்தில் சரணடைந்து விடும். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் சக்தியையும் உணர்ந்து, அதை உள்வாங்கிக் கொள்ளவும், அதனுடன் உறவாடவும் முடியும்.
தூய மனமே இறைவன் வசிக்கும் கோவில். தூய மனம் கொண்டோர் இறைவனுக்கு ஒப்பானவர்.
No comments:
Post a Comment