Saturday, 9 December 2023

"கடந்து போ"!!! பேசாலைதாஸ்

"கடந்து போ"!!! பேசாலைதாஸ்


"ஆபாசம் என்பது உங்களுக்குள் இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனம் எதைப் பார்க்க விரும்புகிறதோ அதுவே உங்களுக்குப் புலப்படுகிறது. 

அங்கே வரும் டூரிஸ்டுகள் கூட அந்த சிற்பங்களை அவசர அவசரமாகப் பார்த்து விட்டு வெளியேறி விடுகிறார்கள். சில நிமிடங்கள் நின்று ரசிப்பதைக் கூட அவர்களது அடக்கப்பட்ட காமம் (repressed sex ) அனுமதிப்பதில்லை. 

கஜுராஹோவை சுற்றிலும் ஏராளமான 'தந்த்ரா' கோயில்கள் இருந்தன. இவற்றையெல்லாம் சுற்றிப்பார்க்கவே சில நாட்கள் தேவைப்படும். அனால் பெரும்பாலானவை இன்று அழிக்கப்பட்டு விட்டன. இப்போது சில கோயில்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. 

இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது. அப்போது காமம்ஒடுக்கப் பட


வில்லை. அடக்கப்படவில்லை. தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப் படவில்லை. 
'காம சூத்திரம்' கூட ரிஷி ஒருவரிடம் இருந்து வந்த நூல். இந்த சிற்பத்தை வடிவமைத்த சிற்பிகளும் இதை நிறைவேற்றிய அரசர்களும் தாந்திரீக வழிபாட்டு முறையில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  அத்தனை அழகான, கலை நுணுக்கம் மிக்க சிற்பங்கள்.

 ஆண்களும் பெண்களும் பல்வேறு நிலைகளில் கலவி கொள்ளும் சிற்பங்கள். உடைகள் இன்றி. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். உடைகள் இல்லாமல் இருத்தலும் (naked) அம்மணமாக இருத்தலும் (nude) வேறானவை.

 அகராதி இவை இரண்டும் ஒரே பொருளுடைய சொற்கள் என்று கூறலாம். ஆனால் அம்மணம் ஆபாசமானது (pornographic). நிர்வாணம் அழகானது. 


இந்த சிற்பங்கள் கலவி நிலையில் இருந்தாலும் அவற்றின் முகங்களைக் கவனியுங்கள். ஒரு முகம் கூட உணர்ச்சி வேகத்தை, சிற்றின்பத்தை வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்படவில்லை. 

ஆழ்ந்த தியான நிலையில் இருப்பது போலவே செதுக்கப்பட்டு உள்ளன. அத்தனை கலவி நிலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒன்றே ஒன்று தான் இல்லை. 

அதுதான் ஆண் மேலேயும் பெண் கீழேயும் படுத்திருக்கும் மிஷனரி நிலை. இந்தப் பரிதாபகரமான பொஷிஷன் மேல்நாட்டு மிஷனரிகள் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஒன்று. 

கொண்டாட்ட மனப்பான்மை கொண்ட இந்தியர்கள் இந்த ஆணாதிக்கக் கலவி  நிலையை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை.

காந்தி இந்த ஆபாச சிற்பங்களை ஒரேயடியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

உங்களால் மகாத்மா என்று அழைக்கப்படுபவர்கள் சதா காமத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இல்லையேல் இத்தனை அழகான சின்னங்களை அழிப்பதற்கு அவசியம் என்ன வந்தது? இவைகளின் மேல் களிமண்ணால் பூசி மெழுகிவிட வேண்டும் என்றார். 

ஆனால் நல்ல வேளை தாகூர் இதை தடுத்து நிறுத்தி விட்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு கவிஞர் அல்லவா? அவர் கலை உணர்ச்சியும் அழகுணர்ச்சியும் நிறைந்தவர். கவிஞர்கள் தங்களை அறியாமலேயே தியான நிலைக்கு மிக அருகில் இருக்கிறார்கள். 

தந்த்ரா, கலவியின் வாயிலாக தியானத்தின் அனுபவத்தை, ஞான நிலையை நாட முயற்சிக்கும் ஒரு பயிற்சி முறை. கலவியில் ஒரு கணமேனும் உங்கள் தன்முனைப்பு (egotism) அழிந்து போனால் அதுவே பெரிய விஷயம். 

 தன் முனைப்பு அழிந்து விடும்போது கலவி களைப்பாகவோ, அலுப்பு தருவதாகவோ, உங்கள் ஆற்றலை உறிஞ்சுவதாகவோ  இருப்பதில்லை. மாறாக உங்களை அது மேலும் ஆற்றலை உங்களுக்குத் தருகிறது. செறிவூட்டுகிறது. உயிர்த்தன்மையுடன் வைக்கிறது. 

பிற்காலத்தில் வந்த அரசர்களால் தாந்திரீகர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். வட இந்தியா முழுவதும் இருந்த இது போன்ற கோயில்கள் அழிக்கப்பட்டன. 

தந்த்ராவின் பெயரால் கட்டற்ற உடலுறவு வளர்ந்து விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சியதே இதற்குக் காரணம். சில கோயில்கள் இந்துக் கோயில்களாக அப்படியே மாற்றப்பட்டன. (தந்த்ரா கோயில்களில் உள்ளே எந்த தெய்வச்சிலையும் இருப்பதில்லை). 

சில கோயில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. சில மாற்றி அமைக்கப்பட்டன. தாந்திரீகர்கள் அண்டை நாடுகளுக்கு துரத்தப் பட்டார்கள். 

நான் என் இளமைக்காலத்தின் பெரும்பாலான நாட்களை இந்தக் கோயிலில் கழித்திருக்கிறேன். தியானம் செய்திருக்கிறேன். 

கோயிலின் செக்யூரிட்டிக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே சென்றிருக்கிறேன்.  'ரஜனீஷை காணவில்லையா, கஜுராஹோவில் இருப்பான், போய்ப் பாருங்கள்' என்று சொல்லும் அளவு. இந்தக் கோயிலின் தியானம் எனக்கு பல்வேறு வாசல்களைத் திறந்து விட்டது. 

இந்தக் கோயில்களில் நீங்கள் முக்கியமான ஒன்றை கவனிக்கலாம். வெளியே இருக்கும் சிற்பங்கள் உள்ளே இருக்காது. உள்ளே எந்த தெய்வ சிலையும் இருக்காது. உள்ளே வெற்றிடம் மட்டுமே இருக்கும். 


வெளியே இருக்கும் கொண்டாட்டமும், ஆரவாரமும், கேளிக்கைகளும் உள்ளே அப்படியே மடைமாற்றம் செய்யப்பட்டு மாறிப் போய் இருக்கும். 

இது நமக்கு சொல்வது 'வெளியே நின்றுவிடாதே, உடலோடு நின்று விடாதே, கலவியோடு திருப்தி அடைந்து விடாதே, முன்னேறிச் செல், உள் நோக்கிச் செல், அங்கே இறைத்தனமை உனக்காக காத்திருக்கிறது' என்பது. 

உண்மையில் நீங்கள் உடலின் தேவைகளை சரிவரப் பூர்த்தி செய்யவில்லை என்றால் காமத்தை நீங்கள் கடந்து போக முடியாது. 

உங்களுக்கு எத்தனை வயதானாலும் அது உங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்போது தான் நீங்கள் கோயிலுக்குள் நுழைய முடியும். இல்லையெனில் உங்கள் விருப்பம் முழுவதும் வெளியிலேயே, சிற்பங்களின் மேலேயே இருக்கும். கடந்து போவதே அழகானது. 

கஜுராஹோவின் ஒவ்வொரு சிற்பமும் நமக்கு இதைத்தான் சொல்கிறது: "கடந்து போ"!!! 

No comments:

Post a Comment