அடுத்த கனம் அர்த்தம் இல்லாதது..
ஒரு வயதான ஜென் சாமியார் இறக்கும் தருவாயில் இருந்தார்.. கடைசி நாளும் வந்துவிட்டது இன்று மாலை தான் இருக்க மாட்டேன், என்று உறுதி பட கூறிவிட்டார். ஆகையால் நண்பர்கள்,சீடர்கள், அவரை விரும்பும் பலர் இருந்தனர் அவர்கள் எல்லோரும் வந்தனர். எங்கெங்கு இருந்தோ வந்து சேர்ந்தனர்...
அவரது பழைய சீடர்களுள் ஒருவர் குரு இறக்கப் போவதை கேள்விப்பட்டவுடன் கடைத்தெருவுக்கு ஓடினார். குரு குடிசையில் இறக்கப் போகிறார், நீ ஏன் கடை தெருவுக்கு ஓடுகிறாய்? என்று யாரோ கேட்டார்கள்.அந்தச் சீடர், என் குருவுக்கு ஒரு குறிப்பிட்ட வகை கேக் மிகவும் பிடிக்கும். அதை வாங்கவே போகிறேன் என்றார்.. அந்த கேக் அப்போது கிடைப்பது மிகச் சிரமமாய் இருந்தது. ஆனால் எப்படியோ அவர் சமாளித்து மாலைக்குள் கேக் வாங்கி எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்.
இங்கு எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். குரு யாருக்கோ காத்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அவர் கண்களைத் திறப்பார், சுற்று முற்றும் பார்ப்பார், கண்களை மூடிக்கொள்வார்.. இந்த சீடன் வந்தபோது அவர், சரி நீ வந்து விட்டாயா! கேக் எங்கே? என்றார். சீடன் கேக்கை தந்தார். சீடருக்கு குரு கேக்கை கேட்டது குறித்து மிகவும் சந்தோஷம்.
குரு அந்த கேக்கை கையில் எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் கை நடுங்கவே இல்லை. அவருக்கு மிகவும் வயதாகி விட்டது.. ஆனாலும் கை நடுங்கவில்லை.யாரோ கேட்டார்கள், உங்களுக்கு ரொம்ப வயதாகி விட்டது, இறக்கப் போகிறீர்கள், கடைசி மூச்சு விட போகிறீர்கள்.. ஆனால் உங்கள் கை நடுங்கவில்லையே?
குரு பதில் அளித்தார். நான் நடுங்கியதே இல்லை. ஏனெனில் எனக்கு பயமில்லை. என் உடலுக்கு வயதாகி விட்டது. ஆனால் நான் இன்னும் இளமையாக தான் இருக்கின்றேன்.. நான் இளமையாகவே இருப்பேன், இந்த உடல் போன பிறகும்..
சொல்லிக் கொண்டே அவர் கேக்கை கடித்துத் தின்ன தொடங்கினார். யாரோ கேட்டார்கள், உங்கள் கடைசி அறிவுரை என்ன குருவே? நீங்கள் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் எப்போதும் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்?
குருவோ, ஆஹா இந்த கேக் மிக நன்றாக உள்ளது, என்று புன்னகையுடன் கூறிவிட்டு இறந்துவிட்டார்.
கேக் மிக நன்றாய் இருக்கிறது சாவு கூட முக்கியமில்லை.. அடுத்த கனம் அர்த்தம் இல்லாதது.. இந்த கணத்தில் இந்த கேக் நன்றாக இருக்கிறது.. இந்த நிகழ் காலத்தில் இப்போது முழுமையாய் உன்னால் இருக்க முடிந்தால் நீ வாழ்வை வாழ்கிறாய்....குருவின் அறிவுரை
No comments:
Post a Comment