வாழ்க்கை ஒரு சமன்பாடு!. பேசாலைதாஸ்
வாழ்க்கை ஒரு சமன்பாடுதான், அதை தீர்க்கும் விடை தெரிந்தால் நீ சாந்தமாவாய், சமாதானமாவாய், அமைதி காண்பாய். நமக்குள் பல சமனற்ற தன்மைகள் உண்டு, சில கூடுதலாக இருக்கும், சில குறைவாக இருக்கும், நல்லவிடயம் கெட்ட விடயம் இரண்டையுமே சொல்கின்றேன். ஆக மொத்தத்தில் நிறைவாக எதுவும் நமக்குள் இல்லை. அதனால் தான் பைபிள் சொல்கின்றது, குறைவானது போகும் போது, நிறைவான ஆவி வருகின்றது என்று, இப்படியும் சொல்லலாம், நாம் வெறுமையாக்கப்படும் போது பூரணத்தை பெற்றுக்கொள்கின்றோம் என்று.
தன்னை இழத்தல் என்றால் என்ன? நான் விளங்கிக்கொண்டதை உங்களுக்கு சொல்கின்றேன், நான் ஞானியல்ல, ஒரு முட்டாள் என வைத்துக்கொளுங்கள்! தன்னை இழத்தல் என்பது, நான் என்ற சுயத்தை இழப்பது, சுய நீதியோடு செயல்படாமல், தாழ்ந்தவன், பாவி என்று ஏற்றுக்கொள்ளுதலே தன்னை இழப்பதற்கு சமனாகும்! கத்தோலிக்கர் தினமும், பூசையில், நான் ஒரு பாவி என ஏற்றுக்கொள்கின்றேன் எனச்சொல்கின்றார்கள், உண்மை அதுவல்ல, உதடுகள் மட்டுமே அதை
சொல்கின்றன. குருவும் சேர்ந்தே அதை செய்துகொண்டு பலியை நிறைவேற்றுகின்றார். நமக்குள் ஞானம் அல்லது நிறைவு பெற்றுக்கொண்டதற்கான எந்த அடையாளமும் இல்லை, அதே கடுகடுப்பான முகம் ஆலையத்தை விட்டு வெளியேறும் போது!
புத்தர் ஞான அமைதி தேடி, கடும் தவம் செய்தார், அவரால் ஞானம் அடைய முடியவில்லை, ஒரு கட்டத்தில் ஞானத்தை அடையும் கடுமையான முயற்ச்சியை கைவிட்டார், அந்த கணமே அவர் ஞானம் பெற்றார். அவருக்குள் அப்படி என்ன நடந்தது? தன்னிலையில், நான் அடைவேன் என்ற தன்முனைப்போடு நடந்து கொண்டபடியால் அவரால் ஞானம் பெறமுடியவில்லை.
விருந்தினர் சபையிலே, எல்லா ஆண்களுக்கும் மத்தியில், தான் ஒரு பெண்,அதுவும் ஊர் அறிந்த வேசை என பெயர்கொண்டவள், தன்னிலை மறுத்து, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என தன்னை மறுத்து, நறுமணத்தைலத்தால் இயேசுவின் பாதம் கழுவி, வெட்கம் சிறிதுமற்று, மானம் போனால் என்ன என தயங்காமல், ஒரு ஆணின் பாதத்தை, தன் தலைமுடியால் துடைத்த அக்கணமே, இறை இயேசுவின் இதயத்தில் சங்கமமாகி, ஞானம் கண்டாள்!
தன்னை இழப்பவன் வாழ்வை கண்டுகொள்கின்றான். இழப்பது பெறுவது என்ற சமன்பாட்டு சூத்திரமே வாழ்க்கை! மீண்டும் ஒரு மெய்த்தேடலில் உங்களை சந்திக்கின்றேன்,,,, அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment