Tuesday, 1 March 2022

நெருங்குவது அல்ல , விலகுவதே ஆன்மீகம் !

நெருங்குவது அல்ல , விலகுவதே ஆன்மீகம் ! பேசாலைதாஸ்


ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள்.

உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் ." எங்கே போகிறாய் ?"

கடவுளை காண போகிறேன் !"

எங்கே ? "

கோவிலில் !"

அங்கே போய் ........"

அவரை வழிபட போகிறேன் ! "

அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

தெரியாது "

எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

அப்படியென்றால் "

உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்.

ஞானி தெளிவு படுத்தினார்.

ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

அதற்க்கு வழி ?"

தியானம்"

தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

இல்லை "

மனிதன் வியப்போடு நிமிர்ந்தான்.

அவர் சொன்னார் :

தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர்அங்கே வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

I WANT PEACE"

ஞானி சொன்னார்:

முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற,வந்தவர் யோசித்தார்.

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . 

கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான் .

சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"

எப்படி அது ?"

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் 

எவ்வளவு தூரம் ?"

ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"உற்சாகமாக சொன்னான்.

உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

இல்லை "

அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

யார் அவர் "

அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

சரி , சுவாமி . நான் வர்றேன் !"சோர்வோடு நடந்து போனான்.

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான்.

ஞானி கேட்டார் :

எங்கே போகிறாய் ? "

வீட்டுக்கு !"

கோவிலுக்கு போகவில்லையா ?"

இல்லை "

அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் '.'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார்.

ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள்..

No comments:

Post a Comment