Friday, 7 October 2022

வடிவமில்லாத சாளரம்

 

வடிவமில்லாத சாளரம்

நாம் மின்சாரத்தைக் கண்டுபிடித்தோம்.
அதனை அறியாத பல சமூகங்களை விடவும் நமது சமுதாயம் மிக முன்னேறியது என்பது உறுதிதான்.
நாம் வானொலி அலைகளைக் கண்டுபிடித்தோம்.
ஒரு வினாடிக்குள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்திகளை அனுப்ப நம்மால் முடியும்.
சில அடி தூரத்திலிருப்பவர்களுக்கும் சத்தம் போட்டுச் சொல்லும் ஒரு சமுதாயத்தினை விடவும் நிச்சயமாக நாம் முன்னேற்றம் அடைந்தவர்களே.
ஆனால் வாழ்வின் மிக உயர்ந்த மூலாதாரத்துடன் தொடர்பு கொள்ளப் பாலம் அமைக்க முடிந்த மக்களோடு ஒப்பிடுகையில் நாம் வெறும் குழந்தைகளே.
நமது மின்சாரமும், வானொலியும் மற்ற கண்டுபிடிப்புகளும் வெறும் விளையாட்டு பொம்மைகள்தான்.
ஒரே திசையில் தீவிரமாக உழைத்தவர்களால்தான் வாழ்வின் இறுதி ரகசியத்தோடு தொடர்பு கொள்ளும் கலையைக் கண்டறிய முடிந்தது.
நான் குறிப்பிட்டதுபோல, விக்கிரகத்தின் ஒரு அம்சத்தைத்தான் மனிதனால் காண முடியும்.
அந்த வடிவத்திற்கு அப்பால், வடிவமற்ற நிலையைக் காண ஒரு சாளரம் திறந்து கொள்கிறது.
ஒரு வீட்டிற்கு வடிவம் இருப்பதுபோலவே வீட்டின் சாளரத்திற்கும் ஒரு வடிவம் இருக்கும்.
வடிவமில்லாத சாளரம் இருக்க முடியாது.
ஆனால் சாளரம் திறந்து வானத்தைப் பார்க்கும்போது நீங்கள் வடிவமற்ற ஒன்றிற்குள் பிரவேசித்துவிடுகிறீர்கள்.
சாளரத்தைத் திறந்து வானத்தைப் பார்த்திராத ஒருவரிடம்,
நான் என் வீட்டு சாளரத்தைத் திறந்து எல்லையற்ற வடிவமில்லா வானத்தைக் கண்டேன் என்று சொன்னால்,
அதனைக் கேட்கும் அவர் உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்பார்.
ஒரு சிறிய சாளரத்தின் மூலம் எல்லையற்றதை எப்படிக் காண முடியும் என்றுதான் நினைப்பார்.
ஏனென்றால் அவரைப் பொறுத்தவரையில் சாளரத்தின் வழியாகத் தெரிவது சாளரத்தின் அளவாக மட்டும்தானே இருக்கமுடியும்?
அதன் வழியாகப் பார்த்தே இராத ஒருவரை நாம் எவ்வாறு நம்ப வைக்க இயலும்?
தர்க்கரீதியிலான கேள்விதான்.
ஆனால், அதன் வழியே பார்த்தே இராத அவரை எவ்வாறு நம்ப வைக்க முடியும்? தன் வழியாகப் பார்க்கக் கூடிய பிரதேசத்திற்கு ஒரு சாளரம் எல்லை வகுத்தது போல,
தன் மூலமாக வடிவிலா பரம்பொருளைத் தரிசிக்க விக்கிரகம் எல்லை வகுப்பதில்லை.
உருவில் வெளிப்படாத பொருளினைக் காண விக்கிரகம் தடையாக இருக்கிறது என நினைப்பது பெரும் தவறு.
சாளரத்தை (சிலைகளை) உடைப்பதன் மூலம் வானத்தை உடைத்துவிடலாம் என நினைப்பவர்கள் இந்த உலகில் ஏகப்பட்ட முட்டாள்தனத்தை உருவாக்கிவிட்டார்கள்.
விக்கிரகங்களை உடைப்பதன் மூலம் உருவ வழிபாட்டை அழித்து விடலாம் என நினைப்பவர்கள் பைத்தியங்களை விடவும் மோசமானவர்கள்.
வழிபாட்டின் கலையையும் வழிபாடு உண்டாக்கும் ரசவாதத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர்களே விக்கிரகங்களை அழித்துவிட நினைக்கிறார்கள்.
வழிபாடு என்பது உள்ளார்ந்த, அகவயப்பட்ட, தனி மனித விவகாரம். அதனை விளக்கவும் முடியாது; செய்து காட்டவும் முடியாது.
ஏனென்றால் அகவயப்பட்ட வாழ்வின் சொந்த அம்சங்கள் எவையும் செய்துகாட்ட இயலாதவை.
என் இதயத்தை வெட்டிப் பிளந்தால் அதில் நீங்கள் அன்பைக் காண முடியாது.
வெறுப்பையோ, சினத்தையோ, மன்னிப்பையோ அல்லது கருணையையோ அதில் காணவே இயலாது.
இரத்த ஓட்டத்திற்காக அது துடிப்பதனை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.
ஏதோ ஒரு மருத்துவர் என்னை அறுவை சிகிச்சை மேசைமேல் படுக்க வைத்து, என் இதயத்தைச் சோதித்து, நான் என்றுமே அன்பையோ அல்லது வெறுப்பையோ உணர்ந்ததில்லை என சான்றிதழ் தந்தால் அவர் சொன்னது தவறு என மறுக்க எனக்கு எந்த வழியும் இல்லை.
என்னிடம் அன்பிருந்தது என்று நான் சொன்னால் அவர் ஒப்புக் கொள்வாரா என்ன?
அதற்குப் பதிலாக எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக அல்லவா அவர் சொல்வார்?
நான் அவரிடம் "நீங்கள் அன்பு, வெறுப்பு போன்ற உணர்வுகளை அனுபவித்தது உண்டா?" என்று கேட்டால்,
அவர் தர்க்கரீதியானவர் எனில், நேர்மையானவர் எனில்,
தனக்கும் அம்மாதிரியான உணர்வு மயக்கங்கள் உண்டு என ஒப்புக் கொள்வார்.
மற்றபடி, இதயம் என்னவோ இரத்தத்தை உந்திக் கொடுக்கும் உறுப்பு மட்டுமே.
ஆனால் அன்பையோ, வெறுப்பையோ உணரக்கூடியது இதயம் போல வேறு எதுவும் இல்லை.
உங்கள் கண்களை அறுத்து ஆராய்ந்தால் அவற்றில் நீங்கள் கனவுகள் கண்டதற்கான ஆதாரத்தைக் காணமுடியாது.
நாம் எல்லோரும் தினமும் கனவுகள் காண்கிறோம்.
அவை எங்கே வாழ்கின்றன?
கனவு என்பது பொய்யாக இருக்கலாம். ஆனால் அது இருப்பது பொய்யில்லை.
ஒரு கனவானது எவ்வளவு இயல்புக்கு மாறாக இருந்தாலும் அது உள்ளே எங்கோ நிகழ்ந்ததுதான்.
உங்கள் கனவுகள் உங்களுக்குள் ஏதோ நடந்திருக்கின்றது என்பதனை உணர்த்தினாலும் புறவயத்தில் இருக்கும் கண்களால் எதனையும் வெளிப்படுத்த முடிவதில்லை.
அகவயப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த எதனையும் வெளியில் பார்க்கவே இயலாது.
நாம் விக்கிரகத்தைப் பார்க்க முடியும்.
இதயத்தை, கண்ணைப் பார்ப்பது போல.
ஆனால் வழிபாட்டினக் காண முடியாது. அது காதலைப் போன்றது;
கனவினைப் போன்றது.
ஒரு கோவிலைக் கடந்து செல்லுகையில் உள்ளிருக்கும் விக்கிரகத்தை நாம் பார்க்கலாம்.
ஆனால் வழிபாட்டினைப் பார்க்க முடியாது. வழிபாடு என்பது உள்ளுக்குள் நிகழ்வது.
வழிபாட்டிற்கு விதிமுறைகள் இருந்தால் வழிபாடு செத்துப் போகும்.
காதலுக்கு விதிமுறைகள் இருந்தால் அது செத்துப் போவது போல.
உள்ளுணர்வின் வெளிப் பிராவகமே காதல்.
ஒரு தனிமனிதனின் சொந்த உணர்வு அது.
இதிலுள்ள சர்வதேசிய உண்மையை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
இருவர் காதலிக்கையில் அந்த இருவரும் தத்தமது சொந்தத் தனிவழிகளிலேயே காதலிக்கிறார்கள்.
வெளிப்பாடு முற்றிலும் வேறாக இருந்தாலும் அனுபவத்தில் ஓர் ஒற்றுமை இருக்கிறது.
அவர்களின் காதல் தனித்தன்மை கொண்டதாக இருந்தாலும் இருவரின் காதலுக்குள்ளும் ஒரே ஆத்மாதான் குடியிருக்கிறது.
அதுபோல விக்கிரகத்தைக் காணலாம்; வழிபாட்டினைக் காண இயலாது

No comments:

Post a Comment